Pages - Menu
Translate
Monday, May 1, 2023
Wednesday, March 8, 2023
பெருமை மிகு பெண்கள்
பெருமை மிகு பெண்கள்:
பெண்ணைவிடப் பெருமையுடையவை ஒன்றும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு. பெண் ஒரு தெய்வப்பிறப்பு என்பதால்தான் உயிர்வாழ இன்றியமையாத நீர், நிலம் போன்றவை பெண்ணாகவே கருதிப் போற்றப்படுகின்றன. கண்ணையும் கருத்தையும் கவரவல்ல கலைத்தாயாகவே வழிபடப்படுகின்றன. உலக இயக்கத்திற்குக் காரணமான சக்தி பெண்ணாகவே கருதப்படுகின்றாள். பெண் செழுமையின் அடையாளம்; மனித குலம் தழைக்க வந்தவள்; ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கான தாய்ப்பால் எனும் அருமருந்தை வழங்குபவள்; அன்பிற் கினியவள், கருணை வடிவானவள். மனிதனால் முதலில் அறிந்து கொள்ளப்பட்ட உறவாகத் தாய் உறவு மட்டுமே இருந்திருக்க முடியும்.
சங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.
சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.மகளிர் தினம் அன்று மட்டும் பெண்களை வானாளவ புகழ்ந்து பேசிவிட்டு மறந்து விடுகிறோம். பெண்கள் போற்றப்பட வேண்டியவர் கள் மட்டுமல்ல, பின்பற்றப்பட வேண்டியவர்களும் கூட.
பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. பெண்கள், எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும். – காரல் மார்க்ஸ்
அன்பால் அரவணைக்கும் அன்னை அவள்
சகோதரனுக்கு தவிக்கும் சகோதரி அவள்
மனதால் மயக்கும் மனைவி அவள்
கண்களால் கவரும் காதலி அவள்
குசும்பு செய்யும் குட்டி மகள் அவள்
மகளிர் தின வாழ்த்துக்கள்
Thursday, January 19, 2023
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9dRpUsopHONAAPNyI-0S8_BgsLSnDZ3ZiA0DdHgSvnMDPtpr3GeHzzyr4IeKEaOeXi2dTQAtRQFsBWlzZ-4dPG9m06vuORGgZxh1_zXPS0k2BgpvQQ72IrN85c490yomjiXH6LI2lfWZ7quTMG1uN7eL8U94T_RXqDrPaUuZXF7RyyFMkVwJUgJpH/w395-h216/WhatsApp%20Image%202023-01-19%20at%207.55.06%20PM.jpeg)
திருப்பத்தூர்:ஜன-19, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளவள்ளி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த பகுதியினைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இம் முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நெற்பயிரில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி, தென்னங்கன்று நடவு ஆகியவற்றை வேளாண் அலுவலர்கள் விளக்கி பேசினர். அதோடு தொழில்நுட்பம் சார்ந்த உழவன் செயலியினை வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவ மாணவர்களுடன் இணைந்து செயல் விளக்கம் அளித்தனர். அதோடு விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும், விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருள் மற்றும் பயிர் வகைகள் குறித்த சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினர். வேளாண்மைத் துறை மட்டும் என்றில்லாமல் கால்நடை துறையும் இணைந்து கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறையில் கருவூட்டல் மற்றும் விவசாயிகளின் கால்நடைகளுக்கு நேரடியாக சென்று சினை பரிசோதனை மற்றும் கால்நடை சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கும் கால்நடை மருத்துவர் சத்யா விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் செல்வம்பாள் சரவணன், ஊராட்சி செயலாளர் தமிழ்வாணன், கிராம நிர்வாக அலுவலர் நந்தன், வேளாண் துறை அலுவலர் ஸ்வஸ்திகா, சந்தன முல்லை, அனுப்பிரியா, உதவி வேளாண் அலுவலர் அஜித்குமார், பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற 150 குடும்பங்களுக்கு 300 மரக்கன்றுகளை வேளாண்மை துறை சார்பில் வழங்கினர்.
Sunday, November 13, 2022
ஆதியூர் செல்வராயன் ஏரி வட்டம் பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர் .......... தீர்வு?
ஆதியூர் செல்வராயன் ஏரி வட்டம் பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர் .......... தீர்வு?
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமம் பெருமாள் கோயில் அருகில் உள்ள செல்வவராயன் ஏரி வட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வருகிறது பல நாட்களாக பஞ்சாயத்து, ஊராட்சி, மாவட்டம், மாநிலம், என அனைத்து துறைகளுக்கும் இது குறித்து புகார்கள் தொடர்ந்து தெரிவித்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் இதுவரை இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. ஏரிக்குள் செல்ல வேண்டிய நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆதியூர் செல்வராயன் ஏரியை பார்வையிட்டு அந்த ஏரியிலிருந்து புலிக்குட்டை ஏரிக்கு நீர் செல்ல கால்வாய் எடுக்கப்பட்டது. ஆனாலும் ஆ.பள்ளிப்பட்டு சு.பள்ளிப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் இருந்து வரும் அனைத்து மழைநீரும் ஏரிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து விடுகிறது. பல மாதங்களாக நீர் வற்றாமல் சென்று கொண்டே இருக்கிறது. இங்கு வரும் மழைநீர் கால்வாய்களை ஏரிக்குள் எடுத்துச் செல்வதே நிரந்தரமான தீர்வாகும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Monday, August 15, 2022
இந்திய சுதந்திர தின சுவாரசிய வரலாறு.... ஒரு பார்வை !
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா !
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும்
நம்மில் பலர் விடுதலை வரலாறு குறித்த புரிதல் இல்லாமல் இருக்கின்றோம்.
பொதுவாக சினிமாக்களில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் ஒரு பெரும்
போராட்டத்திற்கு பிறகு, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காட்சிகள்
இடம்பெற்றிருக்கும். இது உ ண்மைதானா? இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது
குறித்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி தான் அறிவிக்கப்பட்டதா?
இரண்டாம் உலகப்போரும், இந்திய சுதந்திரமும்!
இந்திய சுதந்திர போராட்டம் 1940க்கு பிறகு தீவிரமானது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரும் ஏற்பட்டது. போரின் காரணமாக பிரிட்டீஷ் அரசின் பொருளாதாரம் வெகுவாக குறைந்து, சொந்த நாட்டையே நிர்வகிக்க முடியாத சூழல் நிலவியது. இந்த நிலையில் 1945ல் நடைபெற்ற பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்ததது. இதற்கு முக்கிய காரணம், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இத்தகைய காரணங்களால் 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டீஷ் அரசு முடிவெடுத்தது.
இந்த நிலையில்தான் 1947 பிப்ரவரி 10ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். இவர் உடனடியாக நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார். ஆனால் இது சுமூகமாக முடியவில்லை. காரணம், ஜின்னா தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். இதை மவுண்ட்பேட்டன் எதிர்பார்க்கவில்லை. இது முன்னதாகவே சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்தியது. இது தொடர்பாக 1947 ஜூன் 3ல் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டைப் பிரிப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது.
1945 ஆகஸ்ட் 15ல் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தோல்வியடைந்த ஜப்பானிய வீரர்கள், அப்போதைய ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம், சரணடைந்தனர். இதனால் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மவுண்ட் பேட்டன் முடிவு செய்தார். ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். அதன்படி 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 நள்ளிரவு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
சுதந்திர இந்திய நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப்
பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்திய நாட்டில்
கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும் படி
அழைத்தனர். அவர்களுடைய அழைப்பை ஏற்று அவரும், சிறிது காலம் பதவியில்
இருந்தார். பின்னர், 1948-ம் ஆண்டு ஜூன் மாதம் மவுண்ட்பேட்டணுக்கு பதிலாக
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அமர்த்தப்பட்டார்.
இவ்வாறு இந்திய சுதந்திர தினமானது ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பே ஆங்கிலேயேரலால் அறிவிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு இது அமலுக்கு வந்தது. இத்தகைய சுவாரசியமிக்க சுதந்திர தினத்தின் வரலாறே தெரியாமல்தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கொணடாடி வருகிறோம்.
வந்தே மாதரம் !
Saturday, May 7, 2022
யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா. சான்றிதழ் வைக்கும் கோப்புகள், பரிசுகளை தாளாளர் வழங்கினார்.
ஊற்றங்கரை அடுத்த காரப்பட்டில் இயங்கி வரும் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா தாளாளர் முனைவர் க.அருள் மாணவிகளுக்கு சான்றிதழ் வைக்கும் கோப்புகள், பரிசுகளை வழங்கினார்.
மே 7;கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை அடுத்த காரப்பட்டில் இயங்கி வரும் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பயின்று பல்கலைக்கழகத் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரி தாளாளர் முனைவர் க. அருள் தலைமை வகித்தார். நிகழ்வில் முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் கிருஷ்ணகுமாரி அவர்கள் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார். மூன்று ஆண்டுகள் படித்து முடித்துச் செல்லும் மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்கள் வைக்கும் ஆயிரம் மதிப்புள்ள கோப்பினையும் வழங்கி தாளாளர் சிறப்புரை ஆற்றியதாவது:
நமது கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மாணவ மாணவிகளின் நலன் கருதி செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரம் பெற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்கின்ற உயரிய நோக்குடன் இக்கல்லூரி செயலாற்றி வருகிறது. குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பேருந்துகள் இயக்கி நேரடியாக சிறிய கிராமப் பகுதிகளுக்கு சென்று வருகிறது. மாணவ மாணவிகளுக்கு கல்வி சார்ந்த உபகரணங்கள், உணவு வசதி, விடுதி போன்றவை கண்காணிப்படன் நடத்தி வருவதோடு துறை சார்ந்த சிறந்த தலைவர்களைக் கொண்டு இருபால் பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் திறம்பட கல்விச் சேவை புரிந்து வருகிறது. மாணவ மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக அவ்வப்போது உளவியல் ரீதியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, விழிப்புணர்வு சார்ந்த நாடகங்கள் சிறப்பு விருந்தினர் களை கொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் அவர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு எதிர்கால ஒழுக்க நலன்களை போதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நமது கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக தேர்வில் தங்கம் மற்றும் பல்கலைக்கழக தரவரிசையில் பத்துக்கும் மேற்பட்டோர் இடம்பிடித்துள்ளனர். கிராமப்புறத்தில் இருந்து வரும் ஏழை எளிய நடுத்தர மாணவ மாணவிகள் பயன்பெற்று கிராமப்புறங்களில் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. மாதம் இரு முறை பேராசிரியர்களின் துணையோடு பெற்றோர் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மாணவ மாணவிகள் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்னும் நோக்கில் எந்த கட்டணமும் எதிர்பார்ப்புமின்றி தமிழ்நாடு சீருடை பணியாளர் வகுப்பு, ராணுவம், மாநில மற்றும் மத்திய அரசு சார்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு திறம் மிக்க ஆசிரியர்களை வரவழைத்து கற்றுக் கொடுக்கப்படுகிறது. விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்பதால் கபாடி ,கோகோ கைப்பந்து, ஓட்டப்பந்தயம்,நீளம் தாண்டுதல் போன்றவற்றில் பங்கேற்க செய்து மாவட்ட அளவில் பரிசுகளையும் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. மேலும் மாணவ மாணவிகளின் தனித்திறன்களை வளர்க்கும் விதமாக நடனம் ,நாடகம் ஓவியம், நாட்டுப்புற கலைகள் போன்றவற்றை பயிற்சி அளித்து வரப்படுகிறது. நமது கல்லூரியினை பொறுத்தவரையில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து பூர்த்தி செய்யப்படுகிறது. மூன்றாண்டுகள் முடித்து செல்லும் மாணவிகள் மேற்படிப்பை மேற்கொண்டு பல துறைகளில் சாதிக்க வேண்டும் அதோடு கல்வி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வாழ்த்துக்களோடு தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
அனைவரையும் வரவேற்று முதல்வர் பேசியதாவது: அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்கின்ற காலகட்டம் மாறி தற்போது நகர மாணவ-மாணவிகளை காட்டிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் வலுசேர்க்கும் விதமாக இன்று சாதனை புரிந்து தங்கப்பதக்கங்களை வென்று வருகின்றனர் அதோடு படிப்போடு நிறுத்திவிடாமல் எல்லா துறைகளிலும் பங்குபெற்று சாதனை புரிய வேண்டும் குறிப்பாக மாணவிகள் தங்களது படிப்பினை இடைநிற்றல் இல்லாமல் படித்து சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். இதனைத் தொடர்ந்து கணிதத் துறை தலைவர் கோவிந்தன், கணினித்துறை தலைவர் சங்கர்,ஆங்கிலத் துறை சரண்யா, கணினி பயன்பாட்டுத் துறை வித்யா, விலங்கியல் துறை ஜெயசீலன், தாவரவியல் துறை பிரபு, வேதியியல் துறை அன்பரசு, இயற்பியல் துறை கணபதி, வணிகவியல் துறை அம்பிகா,மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், இருபால் பேராசிரியர்கள் மூன்றாம் ஆண்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார்கள். நிகழ்வினை தொடர்ந்து மாணவ மாணவிகளின் பறை இசை, ஒயிலாட்டம், பரதம், நாட்டுப்புற பாடல்கள், விழிப்புணர்வு நாடகங்கள், மௌன நாடகங்கள் போன்ற நிகழ்வுகள் கண்களை கவரும்படி அழகாக மேடையில் அரங்கேற்றம் செய்தனர். விழாவில் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சைவம் மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மாணவிகள் நன்றியுரை கூறினர்.
Thursday, April 14, 2022
தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022
தமிழ் புத்தாண்டான சுபகிருது வருடம் 2022 சித்திரை 1-ம் தேதி அதாவது வியாழக்கிழமை அன்று ஆரம்பமாகிறது. சுபகிருது ஆண்டு தொடக்க கிரக நிலையானது மேஷத்தில் சூரியன், ராகு, புதன், கன்னியில் சந்திரன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சனி, கும்பத்தில் செவ்வாய், சுக்கிரன், மீனத்தில் குரு என அமைந்திருக்கத் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறந்தாலே இந்த ஆண்டு நம்முடைய ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று ஆர்வமாக இருப்போம். அந்த வகையில் உங்களுடைய ஒவ்வொரு ராசிகளுக்கும் இந்த பதிவில் தமிழ் புத்தாண்டுக்கான பலன்கள் பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
மேஷ ராசி:
ரிஷப ராசி
வீண் சண்டைக்கு போக மாட்டேன் வந்த சண்டையை விட மாட்டேன் என்று இருக்கும் ரிஷப ராசியினருக்கு இந்த வருடம் உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ போகிறது. குடும்பத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியான சூழல் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து குல தெய்வ கோவிலுக்கு சென்று வருதல் வேண்டும். பொருளாதார ரீதியாக பணம் பல வழிகளிலிருந்து உங்களுக்கு வந்தடையும். ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது ஆடை, ஆபரணங்கள், வீடு, வாகனம் போன்ற யோகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த அனைத்து குறைகளும் படிப்படியாக குறைந்து காணப்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.
பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமையில் குரு, சனி வழிபாடு தொடர்ந்து செய்து வர சகல பாக்கியங்களும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்து வாருங்கள்.
மிதுன ராசி:
கடமையே கண் கண்ட தெய்வம் என்று கூறும் மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை பல பிரச்சனைகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி வர கூடிய ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய போகிறது. என்னடா இது வாழ்க்கை என்று நினைத்தவர்களுக்கு வாழ்வில் திடீர் மாற்றங்கள் நடக்கப்போகிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அக்டோபர், நவம்பர் மாதத்தில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியில் கொடுத்த அனைத்து கடன் பாக்கிகளும் மொத்தமாக வசூலாகும். ஆரோக்கியம் பொறுத்தவரை சில உபாதைகளை சந்திக்கலாம். கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி நல்ல புரிதல் உணர்வு காணப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமண வாய்ப்புகள் நிகழும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனி வழிபாடு செய்து வாருங்கள். காக்கைக்கு எள் சோறு வையுங்கள்.
கடகம் ராசி:
அதிக கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில் இந்த ஆண்டு மனதில் ஆறுதல் கிடைக்கும் ஆண்டாக மாறப்போகிறது. குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். திடீர் நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். பணத்தை கையாளும் போது கவனமாக இருக்கவும். உங்களுடைய கடின உழைப்பால் இந்த ஆண்டு கடக ராசியினருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் பொறுத்தவரை ஆண்டின் ஆரம்ப காலத்தில் குருவின் தாக்கம் இருந்தாலும் நாளடைவில் அவை குறைய தொடங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் மனதிற்கு பிடித்தவர்களை மணமுடிக்கும் யோகம் கிடைக்கும்.
பரிகாரம்: தடைகள் அனைத்தும் விலக விநாயகரை வழிப்படுவது நல்லது. அதுமட்டுமல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு தானியங்களை தானமாக வழங்கி வரலாம்.
சிம்மம் ராசி:
இந்த ஆண்டு சிம்ம ராசியினருக்கு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும் ஆண்டாக அமைய போகிறது. எப்போதும் ஏதாவது ஒரு தடைகளையும், கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டிருந்த உங்களுடைய வாழ்க்கையில் அவை படிப்படியாக குறைந்து ஏற்றமான ஒரு நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், சண்டை சச்சரவுகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். பொருளாதாரத்தை பொறுத்தவரை இனிமையான பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். புதிதாக எடுக்கும் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் குறைந்து காணப்படும். ரத்த காயங்கள், வெட்டு காயங்கள் போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரித்து காணப்படும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் துளசியால் பெருமாளுக்கு அர்ச்சனையும், திங்கட்கிழமையில் வில்வத்தால் சிவனுக்கு அர்ச்சனையும் செய்து வந்தால் ஏற்றம் காணலாம். தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் பெற இயலாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.
கன்னி ராசி:
கன்னி ராசியினருக்கு குடும்ப சூழலை பொறுத்தவரை ஏற்ற இறக்கமான பலன்கள் காணப்படும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதற்கான தீர்வுகளும் கிடைத்துவிடும். எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தை பொறுத்தவரை நல்ல வளர்ச்சி காணப்படும். இதற்கு தாய் தந்தையரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வந்தடையும். ஆரோக்கியத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தங்களை சுத்தி சுகாதாரம் பேணி காப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நல்ல தீர்வினை கொடுக்கும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
பரிகாரம்: ஏற்ற இறக்க பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் நவகிரக தோஷ வழிபாடுகளை மேற்கொள்ளுதல் சிறந்தது. குறிப்பாக சூரிய பகவானை வழிபட்டு வாருங்கள் நன்மைகள் பெறலாம்.
துலாம் ராசி:
குடும்பத்தை பொறுத்தவரை அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக குறைய தொடங்கும். வீட்டில் சுப காரியம் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரத்தில் வீண் செலவுகளை குறைத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும். அவ்வப்போது திடீர் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வாகனத்தில் வெளியில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவராயி சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை வரம் கேட்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் புரிதல் உணர்வு அதிகரித்து காணப்படும்.
பரிகாரம்: வாழ்க்கையில் ஏற்றம் காண பவுர்ணமி நாட்களில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். கடன் தொல்லைகள் அனைத்தும் விலக கால பைரவரை வழிபாடு செய்யலாம்.
விருச்சிகம் ராசி:
எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்படாமல் பொறுமையாக செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன்கள் கைக்கூடி வரும். கடன் தொல்லை, முதலீடு இழப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குருவின் அருளால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வாழ்க்கை துணை இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். விலை அதிகம் உள்ள பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாராகத்தான் பலன்கள் காணப்படும். அடிக்கடி உடல் நிலையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பெரிதாக எந்த பாதிப்புகளும் உண்டாகாது. புதிதாக திருமணமானவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் தடைகள் அனைத்தும் நீங்கும்.
தனுசு ராசி:
ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனை வந்துக்கொண்டு இருந்த நிலையில் அதற்கு மாறாக இந்த ஆண்டு அமைய போகிறது. குடும்பத்தில் திடீர் நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வார்கள். பொருளாதாரத்தில் இதுவரை மந்த நிலையில் இருந்த வருமானம் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். வாடகை இடத்திலிருந்து, சொந்த இடத்திற்கு தொழிலில் மாற்றம் உண்டாக வாய்ப்புகள் அமையும். மற்றவர்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பாராட்டுகளை பெறுவீர்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெளியில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இவ்வாண்டில் தியானம், யோகா போன்ற மன அமைதி தரும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும். துன்பங்கள் தீர ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கான உதவிகளை செய்து வாருங்கள்.
மகரம் ராசி:
மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பு நிறைந்த ஆண்டாக மாறப்போகிறது. எதிலும் இதுவரை நாட்டம் இல்லாமல் இருந்த நீங்கள், இனி அனைத்தையும் கற்றுக் கொள்ளும் உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். மகிழ்ச்சியான சூழல் குடும்பத்தில் நிலைக்கும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்குவிப்பார்கள். பொருளாதாரத்தில் உங்களுடைய புதிய முயற்சியில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஆகும். வெளியில் பயணம் செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைய தொடங்கும். திருமணமான புதிய தம்பதிகளுக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் அருள் கிடைக்கும்.
பரிகாரம்: தடைகள் நீங்கி வெற்றி பெறுவதற்கு முச்சந்தி பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கலாம். வாழ்வில் சுமுகமான பலன்கள் கிடைக்க அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி அதில் நெய் விட்டு தீபம் ஏற்றி வைத்து வாருங்கள்.
கும்பம் ராசி:
உங்களின் திறமைக்கு ஏற்ப சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த உங்களுக்கு, இவ்வாண்டு அதற்குரிய அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய வகையில் 2022-ஆம் ஆண்டு அமைய இருக்கிறது. குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கிறது. கடந்த கால சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றால் இவ்வாண்டு அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நவீன பொருள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவற்றில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகமாக கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிகமாக கவனத்துடன் இருக்க வேண்டும். சுவாச பிரச்சனைகள் இருப்பின் மூச்சு பயிற்சி செய்வது நல்லது. கணவன் மனைவி இருவரும் புரிதல் உணர்வினை ஏற்படுத்திக்கொள்வீர்கள். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க இருக்கிறது.
பரிகாரம்: வருமானம் அதிகரிப்பதற்கு புதன் கிழமையில் புத பகவானை வழிபடுவது சிறப்பு. மேலும் அதிர்ஷ்டம் சேர சனிக்கிழமைகளில் தாய் அல்லது தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வரலாம்.
மீனம் ராசி:
இந்த ஆண்டானது மீன ராசியினருக்கு தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வாரி வழங்குகிறது என்று கூறலாம். ஏற்ற இறக்கமான பலன்கள் குடும்பத்தில் காணப்படும். ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். இவ்வருடம் முழுவதும் உங்களுக்கு தேவையான விஷயங்கள் கடினமான போராட்டத்திற்கு பிறகே கிடைக்கும். எதிலும் பொறுமையை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உணவு கட்டுப்பாட்டில் அக்கறை தேவை. மன உளைச்சலில் இருப்பவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். பல வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பரிகாரம்: தீராத நோய்களும் குணமடைய சோமவார விரதம் மேற்கொள்ளலாம். மனதில் நினைத்த காரியம் நடக்க உங்களால் முடிந்த அளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரிவது நல்லது.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்