பழனி: முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனியில்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் கோலாகலமாக
நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி
கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கியது. தினசரியும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பல்வேறு
வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் திருஆவினன்குடி கோயில்
முன்பாக நேற்று நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமார சுவாமி, வள்ளி
தெய்வானைக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான மங்கள
பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள்
வேதபாராயணங்கள் பாட, மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம்
விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம்
செய்தனர். தொடர்ந்து, முத்துக்குமார சுவாமி, அலங்கரிக்கப்பட்ட
வெள்ளித்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து
வெள்ளித்தேரை கிரிவலப்பாதையில் இழுத்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பழனி கோயில் பொறுப்பு இணை ஆணையர் குமரகுரு, துணை
ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று
காலையில் நடைபெற்றது. கிரிவீதியில் ஆடி அசைந்து வலம் வந்த தேரினை ஏராளமான
பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS