Thursday, December 17, 2020

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது - காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

    ஆறுமுநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 2 ½ லட்சம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர்  கைது - எதிரிகளை கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முத்துகிருஷ்ணன், தலைமைக் காவலர் திரு. முத்துகுமார் முதல் நிலைக் காவலர் திரு. மாணிக்கம், பெண் முதல் நிலை காவலர் திருமதி. சியாமளா மற்றும் காவலர் திரு. ரமேஷ்கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (17.12.2020) ரோந்து சென்றபோது ஆறுமுகநேரி பேயன்விளை, கீழ தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் சக்தி விஜயன் (40) என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை, உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த தாசன் மகன் ஜேக்கப் (55) என்பவரிடமிருந்து வாங்கி, விற்பனை செய்வதற்காக ஆறுமுகநேரி, பேயன்விளை, கீழ தெருவில் உள்ள தனது வீட்டின் பின்புறம் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

மேற்படி தனிப்படையினர் குடோனை சோதனை செய்ததில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலை பொருட்கள், 12 மூடைகள் இருப்பது தெரியவந்தது.  இது சம்மந்தமாக ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 250 கிலோ புகையிலைப்பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
 

மேற்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி  தலைமையிலான தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.


 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

வாணியம்பாடி பாலாற்றில் பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிப்பு!


 

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா ராமநாயக்கன் பேட்டை பாலாற்றில் பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்து சிலைகளை மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 இதற்கு முன் பல வருடங்களுக்கு முன்பு இது போன்ற சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 மேலும் இன்னும் நிறைய இது போன்ற சிலைகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.


 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

இந்தியாவில் வாட்ஸப் மூலம் பணம் அனுப்பும் வசதி நடைமுறைக்கு வந்தது...



    தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ)விடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்த நிலையில், இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018ஆம் ஆண்டு, யூபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பாட்டாளர்கள் பணத்தை ஒருவருக்கு அனுப்பவும், பெறவும் முடியும். ஆனால், இதற்கான பரிசோதனை குறிப்பிட்ட சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் சேவையை வழங்க என்பிசிஐ கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதன் மூலம் வர்த்தகர்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்று, பணத்தை வாட்ஸ் அப் மூலம் பெறலாம். ஒருவர் மற்றொருவருக்குப் பணத்தையும் அனுப்ப முடியும். வாட்ஸ் அப்பில் பணம் அனுப்பும் வசதி படிப்படியாக அமல்படுத்தப்படும்.

    ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளின் ஆதரவுடன் இந்த பேமெண்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் இந்தியாவின் தலைவர் அபிஹிஜித் போஸ் விடுத்த அறிவிப்பில் கூறுகையில், 'ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து எளிமையாக, பாதுகாப்பான முறையில் இந்தியா முழுவதும் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

யுபிஐ முறை என்பது பரிமாற்றுச் சேவை. டிஜிட்டல் பொருளாதாரத்தின் நலன்களையும், நிதிச் சேவைக்குள் இதற்கு முன் வாய்ப்பு கிடைக்காத பலரையும் கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 'வாட்ஸ் அப்பில் வங்கிச் சேவையைச் செய்வது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வசதியைக் கொடுத்து வங்கியை எளிதாக நாடவைக்கும். வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம் இனிமேல், நாடு முழுவதும் மக்கள் எளிமையாக நிதிச் சேவைகளைப் பெற முடியும். டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவது பெருமையாக இருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி தொடர்ந்து எளிமையாகவும், வசதியாகவும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்' எனத் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம் ஒருவருக்கு புகைப்படம், வீடியோ, ஆடியோ அனுப்புவதைப் போல் எளிமையாக அனுப்ப முடியும். அதற்கு முன்னதாக, செட்டிங்ஸில் சென்று பேமெண்ட் பகுதியில், நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கணக்கை இணைத்துவிட வேண்டும். அதன்பின் வங்கிக்கணக்கில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்து அதை உறுதி செய்யும். அதன்பின் யுபிஐ மூலம் எளிதாகப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

கடந்த ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் வசதியை உலகின் முதல் நாடாகத் தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரை பேடிஎம், கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் ஃபோன்பே, அமேசான் பே ஆகியவை ஏற்கெனவே வலிமையாக இருக்கும் நிலையில், அவர்களோடு வாட்ஸ் அப் நிறுவனமும் போட்டியிடும். ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பேமெண்ட் சர்வீஸ் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS