![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx5S87IqzdG9JDqiKseG_VWI5Zz_A7ystmeqCZqJ_dbPwh3M5j3f01CXttOsLzwn8TgHu4XvXm_qEvBkCrikAVgaohD-DfK2P6Ja_Z-4WrOdG2zAGfPxcuic3kr43BQrRUDELb4zbMlf8/s320/WhatsApp+Image+2020-09-04+at+1.39.28+PM.jpeg)
திருப்பத்தூர் அடுத்த செலந்தம்பள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, லெமூரியா திட்ட மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட மடவாளம் அடுத்த செலந்தம்பள்ளி கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டபோது நடுக்கல் ஒன்றும், உடன்கட்டை நடுக்கல் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறுகையில், "திருப்பத்தூர் அடுத்த மடவாளம் செலந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அரங்கதிருமால், பிரபு மற்றும் வேலு ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் அந்தக் கிராமத்தில் கள ஆய்வு நடத்தினோம். இதில், அந்தக் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் மேற்குப் பகுதியில், விவசாயி வில்வநாதன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 2 நடுகற்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.
கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லானது 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் வீரனின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உடன்கட்டை நடுகல் ஒன்றும் அங்கு உள்ளது. இக்கல்லானது 2 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.
பண்டைய காலம் தொட்டே தமிழகத்தில் நீதி வழங்கும் முறைகளும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கும் முறைகளும் வழக்கத்தில் இருந்துள்ளன. குற்றங்கள் புரியும் மனிதர்களுக்கு அவர்களின் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பெருங்குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒருவரைக் கொடூரமாகக் கொல்லும் தண்டனை 'கழுவேற்றம்' என்பதாகும். அதாவது, மரக்கட்டையை நட்டுவைத்து அதில் கூர்மையான முனையை ஏற்படுத்தி, பிறகு தண்டனைக்கு உரியவர்கள் கூர்மையான முனையில் அமர்த்தப்படுவர்.
அந்தக் கூர்மையான முனை தண்டனைக்கு உரியவரின் ஆசனவாயில் சென்று பொருந்தும். இதனால், தண்டனை பெறுவோர் உயிர் சிறிது, சிறிதாகப் பிரியும். இறந்து போன மனிதனின் உடலை அப்படியே விட்டுவிடுவார்கள். பிறகு விலங்குகள், பறவைகள் அந்த மனித உடலைத் தின்றுவிடும். இத்தகைய கொடிய தண்டனையே 'கழுவேற்றம்' என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது.
அத்தகைய கழுவேற்ற நடுகல் வகையே செலந்தம்பள்ளியில் நடுகல்லாக கிடைத்துள்ளது. மரக்கட்டையில் மேலாக கழுவேற்றப்பட்ட வீரன் அமர்ந்துள்ளார். பெரிய மேல்கொண்டை, காதுகளில் நீண்ட குண்டலங்கள், கழுத்தில் ஆபரணங்கள், வலது கையை தூக்கி அபய (ஆசீர்வதித்தல்) முத்திரையும், இடது கையை இடது கால் தொடை மீது வீரன் வைத்துள்ளார். அந்த கையில் கத்தி ஒன்றும் உள்ளது. 2 கால்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல்களும், கைகளில் கடங்களும் அணிந்துள்ளார்.
வீரனின் அருகே, உடன்கட்டை ஏறிய பெண் ஒருவர் உருவமும் உள்ளது. அவளது காதுகளில் நீண்ட காதணிகள், வலது கை தொங்கவிடப்பட்டுள்ளது. இடது கையில் மலர் போன்ற முத்திரையும் காணப்படுகிறது. இந்தப் பெண் கழுவேற்றப்பட்ட வீரனின் மனைவியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தன் கணவனை பகைவர்கள் கொன்றுவிட வீரனின் மனைவியும் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறி இறந்துபோனதால் வீரனின் மனைவிக்கும் நடுகல் வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
கழுவேற்றத் தண்டனைக்கு உரியோருக்கும் அவனோடு இறந்துபோன வீரனின் மனைவிக்கும் நடுகற்களை அந்தக் கால மக்கள் வைத்துள்ளனர் என்பதை ஆராயும்போது, இந்த வீரன் தவறு செய்து, அதற்கான தண்டனையைப் பெற்று இறந்தவன் போலத் தெரியவில்லை. ஊருக்காகப்போராடி பகைவர்களால் கொல்லப்பட்டவனாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அதன் காரணமாக அவரது மனைவியும் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியிருக்கலாம்.
இந்த 2 நடுகற்களும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தி உள்ளனர். இதுபோன்ற வரலாற்று ஆவணங்களை மாவட்டத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அவற்றை ஆவணப்படுத்த முன்வர வேண்டும்" என்றார்.