Wednesday, March 8, 2023

பெருமை மிகு பெண்கள்

பெருமை மிகு பெண்கள்:

        பெண்ணைவிடப் பெருமையுடையவை ஒன்றும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு. பெண் ஒரு தெய்வப்பிறப்பு என்பதால்தான் உயிர்வாழ இன்றியமையாத நீர், நிலம் போன்றவை பெண்ணாகவே கருதிப் போற்றப்படுகின்றன. கண்ணையும் கருத்தையும் கவரவல்ல கலைத்தாயாகவே வழிபடப்படுகின்றன. உலக இயக்கத்திற்குக் காரணமான சக்தி பெண்ணாகவே கருதப்படுகின்றாள். பெண் செழுமையின் அடையாளம்; மனித குலம் தழைக்க வந்தவள்; ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கான தாய்ப்பால் எனும் அருமருந்தை வழங்குபவள்; அன்பிற் கினியவள், கருணை வடிவானவள். மனிதனால் முதலில் அறிந்து கொள்ளப்பட்ட உறவாகத் தாய் உறவு மட்டுமே இருந்திருக்க முடியும்.

        சங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.

         சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.

        மகளிர் தினம் அன்று மட்டும் பெண்களை வானாளவ புகழ்ந்து பேசிவிட்டு மறந்து விடுகிறோம். பெண்கள் போற்றப்பட வேண்டியவர் கள் மட்டுமல்ல, பின்பற்றப்பட வேண்டியவர்களும் கூட.

        பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. பெண்கள், எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும். – காரல் மார்க்ஸ்

         அன்பால் அரவணைக்கும் அன்னை அவள்
சகோதரனுக்கு தவிக்கும் சகோதரி அவள்
மனதால் மயக்கும் மனைவி அவள்
கண்களால் கவரும் காதலி அவள்
குசும்பு செய்யும் குட்டி மகள் அவள்
மகளிர் தின வாழ்த்துக்கள் 


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment