
வரலாற்று உண்மைகளை உலகுக்கு எடுத்துரைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புகைப்படங்களே. புகைப்படம் நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். அதை எடுக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
கலைகளின் தலைநகராம் பிரான்சின் பாரிஸ் நகரத்தில் 1839 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி புகைப்படக்கலையின் பின்னுள்ள அறிவியலும், தொழில்நுட்பமும் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அதனை கவுரவிக்கும் நோக்கத்தில், ஆண்டு தோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி 'உலக புகைப்பட தினமாக' கொண்டாடப்படுகிறது.
வரலாறு:
மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது புகைப்படக்கலை. இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புகைப்பட கலையின் தாக்கம் மிக அதிகம். இந்த பூமியையே செயற்கைக்கோள் என்னும் பெரிய கேமரா தினமும் படம் பிடித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவத் துறையில் மனிதனின் உடலினுள் கூட சென்று படம் பிடித்துக் கொண்டிருக்கிறது கேமரா. ஆனால், புகைப்படக் கலையின் வரலாறு 1000 ஆண்டுகள் பழமை உடையது. கி.மு. 300 களில் அரிஸ்டாட்டில் எனும் அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியே புகைப்படத்திற்கு ஆணிவேர். கேமரா என்னும் சொல் 'இருட்டு அறை' என்று லத்தின் மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மிகப்பெரிய கேமரா மூலம் உருவங்களின் பிம்பத்தில் ஓவியம் வரைய பயன்படுத்தினர். பின், 16ம் நூற்றாண்டில் தான் லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1700ம் ஆண்டுகளில் நடந்த ஆராய்ச்சியில் வெள்ளி முலாம் பூசப்பட்ட தகட்டில் ஒளி பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. நைஸ் போர் நீப்ஸ் என்பவரால் 1826ல் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. இது நாளடைவில் அழிந்தது. 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவே. இதன் பின் புகைப்படத்துறை பல்வேறு நிலைகளில் முன்னேறியது. பல அமைப்புகள் சார்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 1850ல் புகைப்படக்கலை இந்தியாவிற்கு வந்தது.
கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.
20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற "டேங்க் மேன்', வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த "சிறுமியின் புகைப்படம்', 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த "குழந்தையின் புகைப்படம்' ஆகியவை குறிப்பிடப்படுகிறது.
கடந்த காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவினோம் ஆனால் இந்த ஆண்டு நாங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மனிதனின் சந்தோசமான தருணங்களை பதிவு செய்யும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அரசு உதவி செய்யவில்லை என தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர் போட்டோ கிராஃப்பர்கள்.
கொரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பல அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது போல், தங்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்கி காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment