Saturday, August 1, 2020

“சுய சுகாதார பாதுகாப்புடன் தியாகப் பெருநாளைக் கொண்டாடுங்கள்” - மு.க.ஸ்டாலின் பக்ரீத் தின வாழ்த்து!

மு.க.ஸ்டாலின்

“எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்”, “அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்” ஆகியவை இஸ்லாமிய மக்களின் அசையாச் சொத்துக்களாக என்றும் இருந்துவருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “எழுச்சியுடன் கொண்டாடப்படும் - தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான இந்தப் பண்டிகை தருணத்தில் - தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று - நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இஸ்லாமியப் பெருமக்களின் முக்கியக் கடமைகள் ஐந்து! அவற்றுள், மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கடமையின்- மிக முக்கிய அங்கம் ; ஏழைகளிடம் கருணை காட்டுவதும், அவர்களுக்குப் பொருளுதவி வழங்குவதுமாகும். அந்தக் கடமையை காலம் காலமாக, இஸ்லாமியப் பெருமக்கள் தங்களின் வாழ்வில் ஒரு அங்கமாகக் கருதி நிறைவேற்றி வருகிறார்கள் என்பது போற்றுதலுக்குரியது.

“ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்- பிறகு நண்பர்கள்- அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து- பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும்- மனித நேயத்தையும் இஸ்லாமியப் பெருமக்கள் வெளிப்படுத்தும் விதமாக, பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஏழை எளியவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குகிறார்கள்.

“எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்”, “அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்” என்ற இரண்டும் இஸ்லாமிய மக்களின் அசையாச் சொத்துக்களாக என்றும் இருந்து வருகின்றன.

நபிகள் நாயகம் அளித்த அந்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள், அதன் வழி நின்று- அடி பிறழாமல் பின்பற்றி- இந்த பக்ரீத் பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

“சிறப்புத் தொழுகை, ஈகை” ஆகிய இரண்டையும் பக்ரீத் பண்டிகை தினத்தில் “இரு கண்களாக” பாவித்து- நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும், இந்தத் தருணத்திற்குரிய சுய சுகாதாரப் பாதுகாப்புகளுடனும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, மீண்டுமொருமுறை எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


புதிய கல்விக் கொள்கைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு !


மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

மேலும் " தாய் மொழி கல்வி 5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறேன். இந்த வரையறையை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பி.எட் கல்வி, வெளிப்படையான ஆசிரியர்கள் நியமனம் போன்ற அறிவிப்புகளுக்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் உயர்கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும்" என கூறியுள்ளார்.

"அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினையும் கற்போம்" என்ற தேமுதிகவின் கொள்கையின்படி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என தனது அறிக்கையில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பக்ரிட் வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி பங்களாதேஷுக்கு பக்ரிட் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    "நீங்கள் மற்றும் எனது பங்களாதேஷ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பும் பெற வாழ்த்துக்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.
     கொரோனா வைரஸ் தொற்றுநோயை இரு நாடுகளும் தொடர்ந்து கையாண்டு வருவதால், பிரதமர் ஷேக் ஹசீனாவின் திறமையான தலைமையின் கீழ் பங்களாதேஷில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இந்தியா பாராட்டுகிறது. சுகாதாரத் துறையில் திறனை வளர்ப்பது உட்பட எந்த வகையிலும் உங்கள் முயற்சிகளை ஆதரிக்க நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம்," என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

பசலிக்குட்டை முருகர் ஆலயத்தில் ஆடி பெருக்கு விழா தடை.

திருப்பத்தூர் -1
    வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று  தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா பல முருகர் ஆலயங்களில் கொண்டாடப்பட இருந்த நிலையில், தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு மேலும் ஆகஸ்ட் 31 வரை பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளதால் பசலிக்குட்டை முருகர் ஆலயத்தில் நடைபெற இருந்த ஆடிப்பெருக்கு விழாவை ரத்து  செய்து திருப்பத்தூர் காவல்துறை மற்றும் ஆலய நிர்வாகமும் அறிவித்துள்ளது.

மேலும் அனைத்து ஆலயங்களுக்கும் இதுபோன்ற தடை அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்ப்பு அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருத்த வருத்தமும், ஏமாற்றமும் தான். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் ஒத்துழைப்பு தந்தால்தான் கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடமுடியும் என்று தங்களை ஆறுதல் படுத்திக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

தியாகத் திருநாளான பக்ரீத் பெருவிழா வாழ்த்துக்கள் - தமிழ் கருடா

    இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர்.

    இன்று ஆகஸ்ட் 1, ஆடி மாதம்  17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இறைவனது அருளை பெறுவதற்கு அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாள்.

வாழ்க்கை எப்போதும், இனிப்பு மட்டுமே நிறைந்ததாகவே இருக்க வேண்டும்.

அல்லாஹ், அனைவரது பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, அனைவரையும் மகிழ்ச்சியாக வைப்பாராக.

அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும், பெருமக்களுக்கும் தமிழ் கருடா தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

 

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்!


சென்னை -1.

    பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

பக்ரீத் வாழ்த்து செய்தி வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் பக்ரீத் திருநாளான இந்நாளில், எனது அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனித இனிய ப்கரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டாளர்கள் என்பதனை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் அவர்கள் இறைக்கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுக்கூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. 

இத்தியாகத் திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனித நேயத்தை மக்கள் மனதில் நிறுத்தி அன்புடனும், சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ்ந்திர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆளுநர் பன்வாரி லால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடவுளின் கட்டளைக்கு மனிதன் கீழ்ப்படிவதன் அடையாளமாக பக்ரீத் கொண்டாடப்படுவதாகவும், இந்தப் புனித நாளில் தாராளம், சகிப்புத் தன்மை, இரக்கம் ஆகிய தெய்வீக நற்பண்புகளுடன் வாழ் அனைவரும் தீர்மானிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Friday, July 31, 2020

தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 5,778 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

1,83,956 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழப்பு



திருப்பத்தூர் ஜூலை 31,
    திருப்பத்தூர் அருகே ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு மின்சார ஊழியர்கள் அலட்சிய  போக்கால் நடந்தேறியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

    திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாத்தூர் கிராம  ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் விவசாயி பாப்பண்ணன் வயது (55) இவருக்கு சொந்தமான இரண்டு பசு மாடுகள்  மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

விவசாயி பாப்பண்ணன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு நாட்டு பசு மாடு வாங்கி விவசாயத்திற்க்காகவும் பால் கறந்து அதன் வருவாயில் குடும்பத்தை நடத்தி   வந்துள்ளார்

இரவு முழுவதும் மழை பெய்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமமே  இருளில் மூழ்கியிருந்தது

கொரட்டி கிராமம் பகுதியிலிருந்து காக்கங்கரை இருப்பு பாதை செல்லும் சாலை வரை இன்று காலை மின்சார பணியாளர்கள் மின் கம்பங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அம்பேத்கர் நகர்  பகுதியில் 11 ஆயிரம் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் பீங்கான் உடைந்து இருப்பதை பார்க்காமல் மின்சார ஊழியர்கள் மின்சாரத்தைச் செலுத்தி உள்ளனர்

அப்போது அப்பகுதியில் பலமான வெடி சத்தம் போல் கேட்டது என்று  சத்தத்துடன் வெடித்து தீப்பற்றிக் கொண்டு மின் வயர் அருந்து சாலை அருகே உள்ள மாட்டின் மீது விழுந்து விட்டது மாடு சிறிது நேரத்தில் துடித்துக் கொண்டு இறந்துள்ளது  

 இதை கண்ட விவசாயி பாப்பண்ணன் கூச்சல் போட்டுக் கொண்டு மாட்டின் அருகே சென்று உள்ளார்.

அப்பொழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மின் வயர் அறுந்து கிடந்தது கண்டு  தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்பொழுது மின்சார ஊழியர்கள் அங்கு பணியில் இருந்துள்ளனர் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிறுத்தம் செய்தனர்.

அது பிரதான கிராமங்களுக்கு செல்லும் சாலையாக அமைந்துள்ளதால் பொது மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியாகும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

 விவசாயி பாப்பண்ணன் இந்த மாடுகளின் வருவாயினைக் கொண்டுதான்  பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

மாடுகளை பறிகொடுத்த விவசாயி குடும்பத்தினர் கதறி அழுவதைக் கண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு கண்கலங்க வைத்து விட்டது.

'நாங்கள் சமீபத்தில் ஒரு லட்சம் மதிப்பில் இரண்டு நாட்டு பசு மாடுகளை வைத்து ஏர் உழுவதற்கும் பால் கறக்கவும் ஜீவாதாரமாக வைத்து வாழ்ந்து வந்தோம். ஆனால் இரண்டு மாடுகளை மின்சாரத்துக்கு பறிகொடுத்துவிட்டு நாங்கள் நடுத் தெருவில் நிர்க்கதியாய் நிற்கிறோம். எங்களுக்கு தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்' என்று விவசாயி பாப்பண்ணன் கூறினார்.

அப்பகுதி மக்கள் கூறுகையில் மின்சார ஊழியர்கள் மெத்தனப்போக்கால் தான் இதுபோன்ற செயல்கள் நடந்தேறி வருகின்றது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.   

கந்திலி காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அப்பகுதியில் இரண்டு மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

விவசாய உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்


திருப்பத்தூர் ஜூலை 31.

    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் பெருந்தலைவர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்

1) இலவச மின்சார சட்ட திருத்த மசோதா 2020 இலவச மின்சார ரத்து செய்வதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர். ஆகவே மத்திய அரசு கொண்டுவந்த இலவச மின்சார சட்டம் ரத்து செய்வதை அமல்படுத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும்

2) தமிழக அரசு பம்ப்செட்டுக்கு கூடுதல் குதிரை திறனுக்கு 1 HP-க்கு 20.000 கட்டணம் செலுத்த அரசாணை வெளியிட்டதை கைவிடக் கோரியும்,

ஆழ்துளைக்கிணறு 500 அடி மற்றும் ஆயிரம் அடிக்கு கீழ் நீர்மட்டம் உள்ளதால் கூடுதல் HP பொருத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவே விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கட்டணமின்றி இலவசமாக கூடுதல் HP பதிவு செய்ய வேண்டும் என்றும்,

3) தொடர்ந்து வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தமிழக அரசு மானிய விலையில் வழங்கிய விவசாய கருவிகள் பயனற்று சூழ்நிலையிள் உள்ளதால் அதனை விவசாயிகளுக்கு பயன்படுத்த ஆவண செய்யுமாறு கோரிக்கை

4) மத்திய அரசு வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு மசோதா 2020 விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே  மசோதா 2020 கைவிடவேண்டும். போன்ற நான்கு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில செயலாளர் திருவள்ளுவன், மாநில பொருளாளர் ஆனந்தன், மாநில இளைஞரணி தலைவர் வெங்கடேசன், வேலூர் மாவட்ட செயலாளர் சிவாஜி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் குப்புசாமி, மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாசம், ஒன்றிய செயலாளர் உதயகுமார் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் சமூக இடைவெளியுடன் மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Thursday, July 30, 2020

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு முதல்வர் பழனிசாமி


சென்னை-30

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர்

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார். ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு 

ரெயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும், இ-பாஸ் நடைமுறையும் தொடரும்

காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி. ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும். 

பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில்  வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் இனி மும்மொழி திட்டம். புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன? மத்திய அரசு விளக்கம்

    டெல்லி: அனைத்து பள்ளிகளிலும் இனி மும்மொழித் திட்டம் அமல்படுத்தப்படும்; 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி கற்பிக்கப்படும்; அனைத்து கல்வி நிலைகளிலும் உலகளாவிய அணுகுமுறை உறுதி செய்யப்படும் என்கிறது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை.

புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல் மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது. கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள் போன்றவை பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவுவதுடன், மாணவர்களையும், அவர்களது படிப்புத் திறனையும் தொடர்ந்து கண்காணித்ததல், முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி முறைகளை உள்ளடக்கிய கல்விக்கான பலதரப்பட்ட வழிகளை ஏற்படுத்தித் தருதல், ஆலோசகர்களின் ஒத்துழைப்பு அல்லது நன்கு பயிற்சிபெற்ற சமூகப் பணியளார்களை பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தருவது.

3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி புகட்டுதல், 10 மற்றும் 12ஆம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப்பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஆகியவையும் இலக்கினை அடைவதற்கான யோசனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில், தற்போதுள்ள 10, +2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும். இதுவரை பள்ளிக்கு வராத 3- 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம் படிப்பதற்கு இந்த புதிய முறை உதவும்.

குழந்தைகளின் மனநிலைக்கேற்ற ஆசிரியர்களை உருவாக்க, இந்த காலகட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. புதிய கல்வி முறை, 3ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12 பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும். 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education - NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கும்.

முன்குழந்தைப் பருவ கவனிப்பு, கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தில் நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்ட, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் போன்ற வலுப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் முன்குழந்தைப் பருவ கவனிப்பு வழங்கப்படும். முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி முறையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் மூலம் கூட்டாக மேற்கொள்ளப்படும். அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு ஆகியவை கல்வி பயில்வதற்கான இன்றியமையாத உடனடித் தேவையாக இருப்பதால் அவற்றை முன் தகுதியாக அங்கீகரிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால், தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு இயக்கம் ஒன்றைத் தொடங்க தேசிய கல்விக்கொள்கை 2020இல் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 2025-க்குள் 3-ஆம் நிலை வரை அனைவரும் பயில ஏதுவாக, உலகளாவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் தயாராக வேண்டும். தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கை ஒன்றும் வகுக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில், கற்போரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களிடம் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை ஏற்படுத்துவதோடு, அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டத்தைக் குறைப்பதுடன், சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும். பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும்.

கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட மாட்டார்கள், பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டவற்றையும் கற்பதற்கும், தொழிற்கல்வி மற்றும் வழக்கமான கல்வி முறைக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. பள்ளிக்கூடங்களிலேயே 6-ஆம் நிலை முதற்கொண்டே தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுவதோடு, உள்ளுறை பயிற்சிமுறையைக் கொண்டதாகவும் இருக்கும். புதிய மற்றும் விரிவான பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு 2020-21 (National Curricular Framework for School Education, NCFSE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும். குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும், ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும், தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது.

மும்மொழித் திட்டம் உள்பட அனைத்து மட்டத்திலான பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும். எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' முன்முயற்சியின் கீழ், 6 முதல் 8 வரையான வகுப்புகளில் 'இந்திய மொழிகள்' குறித்து மாணவர்கள் வேடிக்கை செயல் திட்டம்/நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இடைநிலைக் கல்வி மட்டத்தில், பல்வேறு வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படும்.

நாடு முழுவதும் இந்திய அடையாள மொழி தரப்படுத்தப்படும். செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தேசிய, மாநில பாடத்திட்டப் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கை 2020, சுருக்கமான மதிப்பீட்டிலிருந்து, வழக்கமான, முறையான மதிப்பீட்டுக்கு மாறுவதை எதிர்நோக்குகிறது. இது ஆய்வுகள், விமர்சன சிந்தனை, கருத்தியல் தெளிவு போன்ற உயர் திறன்களுக்கு ஏற்ற வகையில் ,திறன் அடிப்படையிலான ,கற்றல் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.

3,5,8-ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடரும். அதேசமயம் முழுமையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, திருத்தியமைக்கப்படும். புதிய தேசிய மதிப்பீட்டு மையம், பராக் - திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் முழுமையான மேம்பாட்டுக்கான அறிவுப் பகுப்பாய்வு ) (PARAKH - Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development) நிலையான அமைப்பு ஒன்றால், உருவாக்கப்படும். புதிய கல்வி கொள்கை 2020, எந்தக் குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ ,கற்பதுடன் சிறந்து விளங்கும், எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாலினம், சமூக-கலாச்சாரம், புவியியல் அடையாளங்கள், உடல் குறைபாடுகள் உள்பட சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழுக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். பின்தங்கிய பகுதிகள் மற்றும் குழுக்களுக்காக பாலின உள்ளடக்க நிதி, சிறப்புக் கல்வி மண்டலங்கள் அமைப்பதும் இதில் அடங்கும். உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் , வழக்கமான பள்ளிப்படிப்பை அடிப்படையிலிருந்து உயர் கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும். முழுமையான உடல் குறைபாட்டுப் பயிற்சி, ஆதார மையங்கள், வசதிகள், உதவிகரமான கருவிகள், பொருத்தமான தொழில்நுட்ப அடிப்படையிலான உபகரணங்கள், அவர்களது தேவைக்குப் பொருத்தமான இதர பொறிமுறை ஆதரவு ஆகியவற்றுடன் கல்வி கற்பிப்போரின் உதவியும் இதில் இருக்கும். ஒவ்வொரு மாநிலமும்/ மாவட்டமும் , பகல் நேர உறைவிடப் பள்ளியாக'' பால பவன்கள்''_ஐ அமைக்க ஊக்குவிக்கப்படும். கலை தொடர்பான , தொழில் தொடர்பான, விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் இது செயல்படும்.

இலவசப் பள்ளிக் கட்டமைப்பு, சமாஜிக் சேத்னா மையங்களாகப் பயன்படுத்தப்படும். ஆசிரியர்கள், வலுவான , வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதி அடிப்படையிலும், பல ஆதார, கால அளவிலான செயல்திறன் மதிப்பீடு, கல்வியியல் நிர்வாகிகள் அல்லது ஆசிரிய கற்பிப்பாளர்களாக உயரும் வகையிலான முன்னேற்ற வழிமுறைகளின்படியும் , பதவி உயர்வு இருக்கும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (NCERT), மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (SCERT) ஆகிய அமைப்புகள்எல்லா பிராந்தியங்கள் மற்றும் மட்டத்திலுமான ஆசிரியர்கள் மற்றும் நிபுண அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறைத் தரம் என்ற ஒரு பொதுவான அமைப்பு உருவாக்கப்படும்.

பள்ளிகள் வளாகங்களாகவோ, தொகுப்புகளாகவோ அமைக்கப்படும். உள்கட்டமைப்பு, கல்வி நூலகங்கள், வலுவான தொழில்முறை ஆசிரியர் சமூகம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில், நிர்வாகத்தின் அடிப்படை அலகாக அது இருக்கும். புதிய கல்வி கொள்கை 2020 , கல்வி தொடர்பான விஷயங்கள் மற்றும் கொள்கை வகுத்தல், முறைப்படுத்துதல், இயக்குதல் ஆகியவற்றுக்கு தெளிவான, தனி நடைமுறைகளைக் கொண்டுள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், சுதந்திரமான மாநில கல்வித் தர ஆணையத்தை (SSSA) அமைத்துக் கொள்ளும்.

அனைத்து அடிப்படை ஒழுங்குமுறைத் தகவல்களையும் வெளிப்படையாகவும், பொது சுய- அறிவிப்பு வழியாகவும், மாநில கல்வித் தர ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப அளிக்க வேண்டும். அது விரிவான பொது மேற்பார்வை மற்றும் பொறுப்புடைமையாக விரிவாகப் பயன்படுத்தப்படும். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (SCERT) , பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார வரைமுறையை , தொடர்புடைய அனைவருடனும் கலந்தாலோசித்து உருவாக்கும். புதிய கல்விக் கொள்கை 2020 , உயர் கல்வியில் மொத்தப் பதிவு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தொழில் கல்வி விகிதத்தை 26.3 சதவீதத்திலிருந்து ( 2018) , 2035-ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீதமாக உயர்த்துவது இதில் அடங்கும். உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்கள் சேர்க்கப்படும்.

நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல் ஆகியவற்றுடன், விரிவான அடிப்படையிலான , பன்முக, முழுமையான இளநிலைப் பட்ட ப் படிப்பை கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. இளநிலை பட்டக் கல்வி , பன்னோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கல்வி மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்க , அகாடமிக் கிரெடிட் வங்கி உருவாக்கப்படும்.

இது கடைசியாக பட்டம் வழங்கப்படும் போது சேர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும். நாட்டில் உலக தரத்துக்கு இணையாக சிறந்த பன்னோக்கு கல்வி வழங்கும் மாதிரி அமைப்பாக, ஐஐடிக்கள், ஐஐஎம்கள் ஆகியவற்றுக்கு இணையாக, பன்னோக்குக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். உயர் கல்வியில், ஆராய்ச்சித் திறனைக் கட்டமைக்கவும், வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்க்கவும், ஒரு உயர் அமைப்பாக, தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன் உருவாக்கப்படும். மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும். இந்திய உயர் கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒழுங்குமுறைக்காக தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு, தர நிர்ணயித்தலுக்காக பொதுக் கல்விக் குழு, நிதியுதவிக்காக உயர் கல்வி மானியக் குழு மற்றும் அங்கீகாரத்துக்காக தேசிய அங்கீகாரக் குழு. தொழில்நுட்பத்தின் உதவியுடன் முகமில்லா இடையீடு மூலமாக செயல்படும் இந்திய உயர் கல்வி ஆணையம், விதிகள் மற்றும் தரங்களைப் பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் கல்வித் தரத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியான விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படும். உயர்தரக் கற்றல், ஆய்வு மற்றும் சமூகத் தொடர்பை வழங்கும் மிகப்பெரிய, நல்ல வளங்களையுடய, துடிப்பான பல்துறை நிறுவனங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றியமைக்கப்படும். ஆய்வில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழகங்கள், கற்பித்தலில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற பட்டம் வழங்கும் கல்லூரிகள் என பல்கலைக்கழகத்துக்கான விளக்கம் பல்வேறு கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 வருடங்களில் காலாவதி ஆகும் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சியை கட்டம் கட்டமாக படிப்படியாக வழங்குவதற்காக பல படிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்படும். சில காலத்துக்கு பிறகு, ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஊக்கம் நிறைந்த, உற்சாகமுள்ள ஆசிரியர்களை தெளிவாக வரையறுக்கப்பட்ட, சுதந்திரமான, வெளிப்படையான முறையில் பணியமர்த்தவும், பாடத்திட்டங்களை வடிவமைக்க சுதந்திரம் அளிக்கவும், திறமைக்கு ஊக்கமளிக்கவும், கல்வி நிறுவனத் தலைமையை நோக்கி முன்னேறவும் தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

அடிப்படை விதிகளை பின்பற்றாத ஆசிரியர்கள் அதற்கு பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுடன் ஆலோசித்து புதிய மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வித் திட்டக் கட்டமைப்பு, 2021, தேசிய கல்வி மற்றும் பயிற்சிக் குழுவால் வடிவமைக்கப்படும். 2030-க்குள் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மொழிகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த மற்றும் பல்கலைக்கழக/கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால கற்றல்/தொழில்முறை ஆதரவை அளிக்க விரும்பும் திறன்வாய்ந்த மூத்த/ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட தேசிய கற்பித்தல் இயக்கம் அமைக்கப்படும். எஸ் சி, எஸ் டி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர மாணவ தொழில்முனைவோர் வளர்ச்சிப் பிரிவுகளை சார்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வி உதவித்தொகையைப் பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து, மேம்படுத்தி மற்றும் கண்காணிக்க தேசிய கல்வி உதவித்தொகை தளம் விரிவுபடுத்தப்படும்.

தங்களது மாணவர்களுக்கு அதிக அளவில் இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகையை அளிக்க தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்படும். கல்விபெறும் ஒட்டுமொத்த விகிதத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றும் விதத்தில் இது விரிவுப்படுத்தப்படும். இணைய வழி படிப்புகள், டிஜிட்டல் சேமிப்புத் தளங்கள், ஆராய்ச்சிக்கு நிதியுதவி, மேம்படுத்தப்பட்ட மாணவர் சேவைகள், திறந்தவெளி இணைய வழிப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் ஆகியவற்றுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வகுப்புகளில் கற்பிக்கப்படும் கல்வியின் உச்சபட்ச தரத்துக்கு இணையாக இது திகழ்வது உறுதி செய்யப்படும்.. தொற்று நோய்கள் மற்றும் பெருந்தொற்று சமயங்களில், சமீபத்திய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாரம்பரியமான மற்றும் நேரடிக் கல்வி எங்கெல்லாம் சாத்தியமில்லையோ அங்கெல்லாம் இணைய வழிக் கற்றலை ஊக்குவிக்க, தரமான மாற்றுக் கல்வியை வழங்குவதற்கான தயார் நிலையை உறுதி செய்ய விரிவான பரிந்துரைகள் வகுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பாடங்கள் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றைக் கட்டமைக்க மனித வள மேம்பாடு அமைச்சகத்தில் ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்பட்டு, கல்வி மற்றும் உயர்கல்வியின் மின்-கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். கல்வி, மதிப்பிடுதல், திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் யோசனைகளைத் தடையின்றி பகிர்ந்து கொள்ள தேசிய கல்வி தொழில்நுட்பப் பேரவை என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும். வகுப்பறை செயல்முறைகள், ஆசிரியர் தொழில்முறை மேம்பாட்டுக்கு ஆதரவு, வசதி குறைந்த பிரிவினருக்கு கல்விக்கான அணுகுதலை அதிகரித்தல் மற்றும் கல்வித் திட்டமிடுதல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்கு அனைத்து மட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு தேவையான அளவில் செய்யப்படும்.

அனைத்து இந்திய மொழிகளின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் துடிப்புடன் இயங்கும் தன்மையை உறுதி செய்ய, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க நிறுவனம், பாலி, பெர்சிய மற்றும் பிராக்ரித்துக்கான தேசிய நிறுவனம் (அல்லது நிறுவனங்கள்), உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம் மற்றும் இதர மொழித் துறைகள் மற்றும் அதிக உயர்கல்வி நிறுவனங்களில் தாய்மொழி/உள்ளூர் மொழியில் கற்பித்தலை உறுதி செய்தல் ஆகியவற்றை தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கிடையேயான கூட்டுச் செயல்பாடு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை நமது நாட்டில் வளாகங்கள் அமைக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் கல்வியின் சர்வதேசமயமாக்கலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தொழில்முறை படிப்புகளும் உயர் கல்வி அமைப்பின் இன்றியமையாத அங்கமாக இருக்கும். தனிப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், சுகாதார அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை பல்நோக்கு நிறுவனங்களாக ஆவதற்கு முயற்சி செய்யும். இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்ய கொள்கை எண்ணுகிறது.

கல்வித் துறையில் பொதுமுதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை விரைவில் எட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும்.

இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ரேஷன் கடைகளில் இலவசம் இல்லை - அரசு உத்தரவு!

“இனி ரேஷன் கடைகளில் ஃபிரி கிடையாது” அரசு உத்தரவு!

சென்னை-30.
     ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்ட நிலையில், மாநில அரசு அதிர்ச்சியூட்டும் உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளது...

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிக் கிடந்தது. இதையடுத்து மக்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதன்படி ஏப்ரல் மாதம் மாதம் தொடங்கி, மே, ஜூன், ஜூலை மாதங்களில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இனி இந்த முறை தொடராது எனத் தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இதுவரை ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த அத்தியாவசிய பொருட்கள் இனி வழங்கப்படாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களைப் பணம் கொடுத்துத்தான் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையே ஆகஸ்ட் மாதம் பணம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க டோக்கன்கள் 1, 3, 4ஆம் தேதிகளில் வழங்கப்படும்.

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை தொகுப்பாகத்தான் வழங்க வேண்டும். ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் இயங்கத் தொடங்கும். 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், அதற்குப் பதிலாக மாற்றொரு நாள் விடுமுறை வழங்கப்படும். விடுமுறை நாள் குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மாநிலத்தில் ஊரடங்கு முறையில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டபோதும், மக்களின் வாழ்க்கை இயல்புக்குத் திரும்பவில்லை. பெரும்பாலானோர் வேலை இழந்து நிற்கின்றனர். பலர் பணமில்லாமல் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில் இப்படி ஒரு உத்தரவைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, July 29, 2020

ஜெயலலிதா வீட்டில் எவ்வளவு, எத்தனை பொருட்கள் இருந்தன? - விரிவான தகவல்


The Poes Garden muddle, legal imbroglio: AIADMK has egg on its ...

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 4.372 கிலோ தங்கமும் 601.424 கிலோ வெள்ளியும் 8376 புத்தகங்களும் இருந்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும் வகையில் அந்த வீட்டை அரசுடமையாக்கி, நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்கான அரசிதழ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசிதழ் அறிவிப்பில் ஜெயலலிதாவின் இல்லத்தைக் கையகப்படுத்தியபோது என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா

அதன்படி, ஜெயலலிதாவின் இல்லத்தில் தங்கப் பொருட்கள் 14 இருந்ததாகவும் அவற்றின் மொத்த எடை 4 கிலோ 372 கிராம் என்றும் வெள்ளிப் பொருட்கள் 867 இருந்ததாகவும் அவற்றின் எடை 601 கிலோ 424 கிராம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, 11 டிவிக்கள், 10 ஃப்ரிட்ஜ்கள், 38 குளிர்சாதனக் கருவிகள், 556 ஃபர்னிச்சர்கள், 6514 சமையலறைப் பொருட்கள், 15 பூஜை பொருட்கள், 10,438 துணிகள், 29 தொலைபேசிகள், மொபைல் போன்கள், 8376 புத்தகங்கள், 653 ஆவணங்கள், 6 கடிகாரங்கள் ஆகியவையும் அவரது இல்லத்தில் இருந்ததாக தமிழக அரசின் அரசிதழ் தெரிவிக்கிறது.

இந்த இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே தமிழக அரசால் நகர சிவில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்க அரசு மீண்டும் உத்தரவு.

puduchery-government-ordered-to-take-census-of-ration-catds

புதுச்சேரி-29.

புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணியை வரும் 31-ல் தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அமைச்சக ஊழியர் சங்கமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மக்களுக்குக் குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3.4 லட்சத்துக்கும் அதிகமான மஞ்சள், சிவப்பு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வசதி படைத்த பலர் சிவப்பு குடும்ப அட்டை வைத்திருப்பதாகவும் துறைக்குப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும், மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2  குடும்ப அட்டைகள் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக 1.7 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்திக் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.

புதுச்சேரி அரசு ரேஷன் அட்டைகளைக் கணக்கெடுப்பு செய்ய கடந்த ஜூன் 19-ல் உத்தரவிட்டது. அதற்கு அரசு ஊழியர்கள் தரப்பில் கரோனா அச்சம் குறித்துத் தெரிவிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இக்கணக்கெடுப்புப் பணியை வரும் ஜூலை 31-ல் தொடங்கி ஆகஸ்ட் 13-ல் முடிக்க குடிமைப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் 35 கண்காணிப்பாளர்கள், 71 உதவியாளர்கள், 250 யூடிசி, எல்டிசி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் வல்லவன் இவ்வுத்தரவை இன்று (ஜூலை 29) பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் இது தொடர்பாக கூறுகையில், "கரோனா தாக்கம் தற்போது அதிக அளவில் உள்ளது. இக்காலத்தில் இந்த ஆய்வு நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில், குடும்பத்திலுள்ள நபர்கள், வீட்டில் எத்தனை தனி சமையலறை உள்ளது, தொலைக்காட்சி, ஏசி, குளிர்சாதன பெட்டி, வாசிங் மெஷின், இருசக்கர வாகனம், கார் என பல அம்சங்களைக் கணக்கிடக் கூறியுள்ளனர்.

கரோனா காலத்தில் வீட்டுக்குள் ஆய்வுக்குச் செல்பவர்களை அனுமதிப்பது கடினம். சுகாதாரப் பாதுகாப்பின்மை குடும்ப அட்டை உரிமையாளர்களுக்கும் ஏற்படும். இக்கணக்கெடுப்பு இக்காலகட்டத்துக்கு ஏற்றதல்ல. மேலும், பணியில் ஈடுபடுவோருக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். இப்பணியை கரோனா அச்சம் அகலும் வரை தள்ளிவைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இப்பிரச்சினை தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் மனு தந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தகுதியான பலர் சிவப்பு அட்டை வேண்டுமென விண்ணப்பித்தும் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த பத்தாண்டு காலத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் மற்றம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் சிவப்பு குடும்ப அட்டை மற்றும் உணவு தானியங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு அரசின் கடமையாகும்.

கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், உள்நோக்கத்தோடு சிவப்பு குடும்ப அட்டை வைத்திருக்கக் கூடியவர்களை முறைப்படுத்துவதற்காக கணக்கெடுப்பு நடத்துவது தவறானது.

இப்பணியில் 200-க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர்களை ஈடுபடுத்த முடிவு செய்திருப்பதும் பொருத்தமற்ற நடவடிக்கையாகும். அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கணக்கில் கொள்ளாமல் தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது - முதல்வர் பழனிசாமி

edappadi palanisamy
தமிழக முதல்வர் பழனிசாமி - கோப்பு படம்
சென்னை-29.
    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதை குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய பிறகு உரையாற்று வருகிறார். முதல்வர் உரை, '' தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா உயிரிழப்பு விகிதமும் மிக குறைவு. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி, உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா சூழலில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5 முதல் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளன. குடும்பத்தில் ஒருவருக்கு தலா 2 என்கிற வீதத்தில் விலையில்லா முகக்கவசம் வழங்கப்படும்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் கடைமடைக்கும் தண்ணீர் சென்றுள்ளது. தமிழகம் முழுவதும் குடிமரத்துப்பணிகள் 85 சதவீதம் அளவிற்கு நிறைவு பெற்றுள்ளன. விலையில்லா முகக்கவசம் மற்றும் முகாம்களால் சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் உள்ளன. சென்னையில் மட்டும் கொரோனா ஒழிப்பு பணியில் சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? பேருந்து, ரயில் சேவைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்வு 3.0 - இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து. முழு விவரம்.

 ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள்:  உள்துறை அமைச்சகம்  வெளியீடு


புதுடெல்லி:29
        மார்ச் 23 முதல்  முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு  இருந்துவந்த நிலையில் இடையில் சிறு சிறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2ஆம் கட்ட தளர்வுகள் வருகின்ற ஜூலை 3ஆம்  தேதி முடிவுறும் நிலையில் 3ஆம்  கட்ட தளர்வுகள் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் விபரம்  பின்வருமாறு. 
  • இதுவரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு முற்றிலும் நீக்கப்படுகிறது.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே அறிவித்துக்கொள்ளலாம்.
  • சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, பண்பாடு, மத நிகழ்ச்சிகளுக்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிக்கப்படுகிறது.

  • மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்கு ஆடிட்டோரியம், அசெம்ப்ளி ஹால் போன்ற பகுதிகள், அதிகமாக மக்கள் கூட்டக் கூடிய சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி கலாச்சாரம் மத நிகழ்வுகள்
    பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை தடை தொடரும்..
  • மாநிலங்களுக்கு உள்லேயும், வெளியிலும் செல்ல இ பாஸ் தேவையில்லை. ஆனால்  இதுகுறித்து மணிலா அரசுகள் முடிவெடுக்கலாம்.
  •  யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.
  •  வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி.
  • சுதந்திர தின விழா தனிமனித இடைவெளியுடன் கொண்டாடவேண்டும்.
  •  கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்
  • 10 வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும்.
  • கொரோனா பாதிப்பு குறித்த விபரங்களை அறிய ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்தவேண்டும்.
  • அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 ஒரு பக்கம் நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் தளர்வுகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த தளர்வுகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இருப்பினும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, வெளியே செல்லும்போது சானிடைசர் போட்டு கையை துடைப்பது, வீட்டுக்கு வந்ததும் சோப்பு போட்டு கை கழுவுவது, முகக்கவசம் கட்டாயம் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாகதான் அதை கட்டுப்படுத்த முடியும்.

சிங்கப்பூரில் 5 தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு


சிங்கப்பூர் : பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உட்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இத்தேர்தல் மூலம் 93 எம்பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 37 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர். இந்த ஆண்டு முதன்முறையாக இஸ்தானா, நாடாளுமன்றம் என 2 இடங்களில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

அதிபர் ஹலிமா உரை நிகழ்த்தி பதவியேற்புச் சடங்கைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் லூங் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். லீ சியென் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உள்பட 37 பேர் பதவியேற்றுள்ளனர்.
 
* தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
* கா.சண்முகம், எஸ்.ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த அமைச்சரவையில் வகித்த பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர்.
* இந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராகத் தொடர்வதுடன் தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராக பதவியேற்றார்.
 

Tuesday, July 28, 2020

28-07-2020 இன்று கொரோனா விபரம்

சென்னை:28. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,27,688-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,66,956 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 57,073 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,659-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த திருப்பத்தூர் நகராட்சியின் சிறப்பான நடவடிக்கை.


திருப்பத்தூர். 28.

உலகம் முழுவதும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உயர்ந்துவரும் கொரோனா பாதிப்பை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சமூக பரவலை தடுக்கவும் திருப்பத்தூர் நகராட்சியினர் பொதுமக்கள் கூடும் இடங்களில் நேரடியாக சென்று டெம்பரேச்சர் மற்றும் ஆக்ஸிஜன் அளவை பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது.







Monday, July 27, 2020

ஓபிசி இடஒதுக்கீடு மறுக்க முடியாது- ஐ கோர்ட் தீர்ப்பு: தமிழக முதல்வர் வரவேற்பு

Centre gives approval for two more medical colleges, CM EPS thanks ...
எடப்பாடி பழனிசாமி
சென்னை - 27.
    மருத்துவ படிப்பில், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன். அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையால்தான் இந்த சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

  இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது:இட ஒதுக்கீடு வழங்க, விரைவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இட ஒதுக்கீடு கோர ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது. வழங்க எந்த தடையும் இல்லை. குறைந்தபட்ச கல்வி தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். மத்திய , மாநில அரசுகள் மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும்.மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மத்திய அரசு 3 மாதங்களில் முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

ரத்னாஸ் லயன்ஸ் சங்கம் அப்துல்கலாம் நினைவுதினம் அனுசரிப்பு



திருப்பத்தூர். 27.

    நமது முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்காலாம் அவர்களின் 5- வது நினைவு தினத்தினை அனுசரிக்கும் வகையில் இன்று திருப்பத்தூர் ரத்னாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில்,  கொரோனா தொற்று விழிப்புணர்விலும், பொதுமக்களின் பாதுகாப்பிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட முன்னாள் தேசிய மாணவர் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

    இந்நிகழ்வில் ரத்னாஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் மகாத்மா காந்தி முதியோர் இல்ல நிறுவனர் லயன்ஸ் கிஷோர்பிரசாத், செயலாளர் வினோத், பொருளாளர் சக்கரவர்த்தி, லயன்ஸ் GLT புவனேஷ்வரி, ஜெனார்தனம்  மற்றும் பலர் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Sunday, July 26, 2020

தமிழகத்தில் கொரோனா இன்று


சென்னை:26. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,13,723-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,56,526 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53,703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,494-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1155 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 1315 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் இறப்பு. 13744 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோயம்பதூரில் இன்று 220 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 103 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1 பேர் இறப்பு. 1491 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தர்மபுரியில் இன்று 131 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 23 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு.  396 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரியில் இன்று 51 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 9 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ராணிப்பேட்டையில் இன்று 367 பேர் புதிய தொற்று உறுதி செய்யப்படது. 189 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் இறப்பு.  2002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சேலத்தில் இன்று 162 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 39 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருப்பத்தூரில் இன்று 44 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 21 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 
திருவண்ணாமலையில் இன்று 176 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 681 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் இறப்பு. 1165 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வேலூரில் இன்று 196 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 154 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் இறப்பு. 1171 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முழு ஊரடங்கு - ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 திருப்பத்தூர்-ஜூலை, 26.

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு மக்கள் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் முழுமையாக காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே ஒரு சில இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகிறது. மருந்து கடைகள் மட்டும் முழுவதுமாக இயங்கி வருகிறது. இன்றைய முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஐபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழிசை சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா.


 
திருப்பத்தூர்- 

    திருப்பத்தூர்  மாவட்டத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தமிழிசை சங்கத்திற்கு சொந்தமான இடம் சின்னகுளம்   மாரியம்மன் ஆலயம் அருகில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க ஏ.ஜி.எஸ். குழுமத்தினர் பங்களிப்போடு செயல்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் துவங்கப்படுள்ளது.
   
    மாவட்ட ஆட்சியர் மா.ப.சிவனருள் அவர்களின் ஆலோசனையின் படி அந்த இடத்தை சுத்தம் செய்து வேறு இடத்தில் இருந்த பத்தாண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருக்கரங்களால் பதியம் செய்யப்பட்டது.

     நிகழ்வில் துணை ஆணையாளர் திருமலை, ஏ.ஜி.எஸ். குழுமத்தின் தலைவர் அ.ஞானசேகர், சுமங்கலி ஜூவல்லர்ஸ் குழுமத்தின் தலைவர் ராஜேஷ் ஜெயின், சந்திரா பேன்சி ஹால் தலைவர் வினோத்குமார், திருப்பத்தூர் நகர்ப்புற வீடியோ சங்க தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் ஏ.ஜி.எஸ். மால் செந்தில்முருகன், ஹரிஷ்குமார், அருண்குமார், ஏஜி அபிஷேக், லட்சுமணன், சி.எஸ். கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் மூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஏ.ஜி.எஸ். குழுமத்தின் பணி சிறக்க தமிழ் கருடா வாழ்த்துகிறது.