புதுச்சேரி-29.
புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணியை வரும் 31-ல் தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அமைச்சக ஊழியர் சங்கமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மக்களுக்குக் குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3.4 லட்சத்துக்கும் அதிகமான மஞ்சள், சிவப்பு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வசதி படைத்த பலர் சிவப்பு குடும்ப அட்டை வைத்திருப்பதாகவும் துறைக்குப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும், மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 குடும்ப அட்டைகள் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக 1.7 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்திக் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.
புதுச்சேரி அரசு ரேஷன் அட்டைகளைக் கணக்கெடுப்பு செய்ய கடந்த ஜூன் 19-ல் உத்தரவிட்டது. அதற்கு அரசு ஊழியர்கள் தரப்பில் கரோனா அச்சம் குறித்துத் தெரிவிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இக்கணக்கெடுப்புப் பணியை வரும் ஜூலை 31-ல் தொடங்கி ஆகஸ்ட் 13-ல் முடிக்க குடிமைப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் 35 கண்காணிப்பாளர்கள், 71 உதவியாளர்கள், 250 யூடிசி, எல்டிசி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் வல்லவன் இவ்வுத்தரவை இன்று (ஜூலை 29) பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் இது தொடர்பாக கூறுகையில், "கரோனா தாக்கம் தற்போது அதிக அளவில் உள்ளது. இக்காலத்தில் இந்த ஆய்வு நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில், குடும்பத்திலுள்ள நபர்கள், வீட்டில் எத்தனை தனி சமையலறை உள்ளது, தொலைக்காட்சி, ஏசி, குளிர்சாதன பெட்டி, வாசிங் மெஷின், இருசக்கர வாகனம், கார் என பல அம்சங்களைக் கணக்கிடக் கூறியுள்ளனர்.
கரோனா காலத்தில் வீட்டுக்குள் ஆய்வுக்குச் செல்பவர்களை அனுமதிப்பது கடினம். சுகாதாரப் பாதுகாப்பின்மை குடும்ப அட்டை உரிமையாளர்களுக்கும் ஏற்படும். இக்கணக்கெடுப்பு இக்காலகட்டத்துக்கு ஏற்றதல்ல. மேலும், பணியில் ஈடுபடுவோருக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். இப்பணியை கரோனா அச்சம் அகலும் வரை தள்ளிவைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் மனு தந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தகுதியான பலர் சிவப்பு அட்டை வேண்டுமென விண்ணப்பித்தும் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த பத்தாண்டு காலத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் மற்றம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் சிவப்பு குடும்ப அட்டை மற்றும் உணவு தானியங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு அரசின் கடமையாகும்.
கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், உள்நோக்கத்தோடு சிவப்பு குடும்ப அட்டை வைத்திருக்கக் கூடியவர்களை முறைப்படுத்துவதற்காக கணக்கெடுப்பு நடத்துவது தவறானது.
இப்பணியில் 200-க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர்களை ஈடுபடுத்த முடிவு செய்திருப்பதும் பொருத்தமற்ற நடவடிக்கையாகும். அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கணக்கில் கொள்ளாமல் தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment