Thursday, July 30, 2020

இனி ரேஷன் கடைகளில் இலவசம் இல்லை - அரசு உத்தரவு!

“இனி ரேஷன் கடைகளில் ஃபிரி கிடையாது” அரசு உத்தரவு!

சென்னை-30.
     ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்ட நிலையில், மாநில அரசு அதிர்ச்சியூட்டும் உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளது...

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிக் கிடந்தது. இதையடுத்து மக்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதன்படி ஏப்ரல் மாதம் மாதம் தொடங்கி, மே, ஜூன், ஜூலை மாதங்களில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இனி இந்த முறை தொடராது எனத் தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இதுவரை ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த அத்தியாவசிய பொருட்கள் இனி வழங்கப்படாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களைப் பணம் கொடுத்துத்தான் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையே ஆகஸ்ட் மாதம் பணம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க டோக்கன்கள் 1, 3, 4ஆம் தேதிகளில் வழங்கப்படும்.

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை தொகுப்பாகத்தான் வழங்க வேண்டும். ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் இயங்கத் தொடங்கும். 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், அதற்குப் பதிலாக மாற்றொரு நாள் விடுமுறை வழங்கப்படும். விடுமுறை நாள் குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மாநிலத்தில் ஊரடங்கு முறையில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டபோதும், மக்களின் வாழ்க்கை இயல்புக்குத் திரும்பவில்லை. பெரும்பாலானோர் வேலை இழந்து நிற்கின்றனர். பலர் பணமில்லாமல் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில் இப்படி ஒரு உத்தரவைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment