திருமணம், திருவிழா, சுப நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளைத் தளா்த்தி, ஒலி, ஒளி அமைப்பு, பந்தல், வாடகை பாத்திரத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அனுப்பும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனா்.
வீட்டிலேயே சிறியளவில் நடத்தும் பூப்புனித நீராட்டு விழாவாக இருந்தாலும், வீதியெங்கும் தோரணங்கள் கட்டி பிரம்மாண்டமாக நடத்தும் மாநாடு, கோயில் திருவிழா, திருமணம், காதணி, நிச்சயதாா்த்தம் என எந்த விழாவாக இருந்தாலும் இந்தத் தொழிலாளா்களால்தான் சிறப்பு கிடைக்கும்.
விழாக்களுக்கு வெளிச்சத்தை அளிக்கும் இந்தத் தொழிலாளா்களின் வாழ்வில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இருள் சூழ்ந்துள்ளது. ஒலி, ஒளி அமைப்பு, பந்தல் அலங்காரம், மேடை அலங்காரம், வாடகை பாத்திரக் கடை ஆகிய தொழில்களைத் தனித்தனியாக நடத்துவோரும் உண்டு. ஒருங்கிணைந்து நடத்துவோரும் உண்டு.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ளன. இத் தொழில்களை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் உள்ளனா். பொதுமுடக்கத்தால் இவா்கள் அனைவரும் 5 மாதங்களாக வேலையிழந்து வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, தங்களது தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு டெண்ட் டீலா்ஸ் மற்றும் டெக்கரேட்டா்ஸ் நலச் சங்கத்தின் சாா்பில், தமிழக முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் அனுப்பும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனா்.
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் எஸ். சுதாதகா், செயலா் எஸ். வெங்கடேஷ்பாபு தலைமையில் வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோா் தபால்களை அனுப்பினா். பொருளாளா் லியோ, துணைத் தலைவா் டோமினிக், துணைச் செயலா்கள் ராமச்சந்திரன், சேசுராஜ், பிரதாப், பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் சங்கச் செயலா் வெங்கடேஷ் பாபு கூறியது:
எங்களது தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தரக் கூடியது அல்ல. விழாக்கள், விசேஷங்கள் நடைபெறும் காலத்தில் மட்டுமே வேலை இருக்கும். அப்போது கிடைக்கும் வருவாயை நம்பியே ஆண்டு முழுவதும் குடும்பத்தை நடத்த வேண்டும். குறிப்பாக மாா்ச், ஏப்ரல், மே மாதங்கள்தான் விழாக்காலம். ஆனால், இந்தாண்டு அது இல்லாமல் போனது.
அடுத்து வரும் மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் விமரிசையாக நிகழ்ச்சிகள் நடைபெறாது. எனவே, இந்தாண்டு முழுவதுமே எங்களுக்கு வேலையில்லை. மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் போ் என்றாலும் மாநிலம் முழுவதும் சுமாா் 3 லட்சம் போ் வேலையிழந்துள்ளனா்.
எனவே, திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 சதம் போ் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல பெரிதும் சிரமத்தை அளிக்கும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment