Wednesday, August 12, 2020

குடும்ப சொத்து பங்கீட்டில், ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கும் சம உரிமை உள்ளது - உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

 

புதுடில்லி : குடும்ப சொத்து பங்கீட்டில், ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பெண்களுக்கு, குடும்ப சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம், 2005ல் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லை என்றும், இச்சட்டம், 2005ல் கொண்டு வரப்பட்டதால், அதற்கு முன் பிறந்த பெண்களுக்கு, இந்த சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில், 'ஆண் வாரிசைப் போலவே, பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும்.'ஆண்களுக்கு சொத்தை சமமாக பிரித்து வழங்குவது போல, பெண்களுக்கும் வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், '2005ல் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே பெற்றோரை இழந்திருந்தாலும், அப்பெண்ணுக்கு, சொத்தில் உரிமை உண்டு' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'கடந்த, 2005 செப்டம்பர், 9ல், வாரிசு உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில், பெண் மற்றும் அவரது பெற்றோர் உயிருடன் இருந்தால் மட்டுமே, சொத்தில் சம உரிமை கோர முடியும்' என, உச்ச நீதிமன்றம் முந்தைய உத்தரவில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், 'இது சட்ட திருத்தத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும்' என தெரிவித்த நீதிபதிகள், குடும்ப சொத்தில், பெண்களுக்கான சம உரிமையை, நேற்று உறுதி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment