கரோனாவால் உலகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பல ஆண்டுகளாகத் தொடரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, ஜெனீவாவில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில், புதன்கிழமை நடைபெற்ற அமைப்பின் அவசரக்கால குழுக் கூட்டத்தில் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:
6 மாதங்களுக்கு முன்னா் சீனாவுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், அப்போதே அந்த நோய்த்தொற்று பரவலை சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரை செய்தீா்கள். அப்போதைய நிலையில் கரோனா நோய்த்தொற்றை சா்வதேச சுகாதார நெருக்கடியாக நினைப்பது வேடிக்கையாக இருந்திருக்கும்.
ஆனால், இப்போது அந்த நோய்த்தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. இதுபோன்ற ஒரு கொள்ளை நோய் உலகில் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உலகைத் தாக்கும். இதன் பாதிப்புகளை உலகம் இன்னும் பல பதின்ம ஆண்டுகளுக்கு உணரும்.
கரோனா நோய்த்தொற்று குறித்த அறிவியல் ரீதியிலான பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. பல புதிா்கள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே இருக்கின்றன.
பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆய்வு முடிவுகள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன. உலகின் பெரும்பாலான மக்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பல நாடுகள் கரோனா நோய்த்தொற்றின் தீவிரத்திலிருந்து விடுபட்டதாக தங்ககளைக் கருதி கொண்டன. ஆனால், அதே நாடுகளில் அந்த நோய்த்தொற்று மீண்டும் தீவிரமடைந்தது. சில நாடுகளில் பல வாரங்களாக கரோனா நோய்த்தொற்று பரவல் மிதமாகவே இருந்தது. ஆனால், அந்தப் பகுதிகளில் திடீரென நோய்த்தொற்று பரவலும், அந்த நோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிப்பதைக் காண முடிகிறது.
இன்னொரு புறம், கரோனா நோய்த்தொற்று கடுமையாகப் பரவி வந்த சில நாடுள் அந்த நோய்த்தொற்று பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கங்கள் அமல்படுத்தப்படுவதால், நாடுகளின் பொருளாதாரம் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. எனவே, நன்கு செயல்படக் கூடிய கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்படுவதே அந்த நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாகத் தெரிகிறது.
இதுவரை இல்லாத சாதனை வேகத்தில் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கினாலும், அந்த மருந்து அனைவரையும் சென்றடைவதற்கு வெகு காலம் ஆகும்.
அதுவரை, அனைவரும் கரோனாவோடு வாழ்ந்துகொண்டே, கைவசம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டே அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்றாா் டெட்ரோஸ் அதனோம்.
சனிக்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதும் 1.78 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 6.84 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். அந்த நோயால் பாதிக்கப்பட்ட 1.1 கோடிக்கும் மேற்பட்டவா்கள் குணமடைந்துள்ளனா்.
உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 47,07,584-ஆக உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 26,66,298 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் அதிக உயிா்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 1.56 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேஸிலில் 92,568 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமா உயிரிழந்துள்ளனா். 3-ஆவது இடத்துக்கு வந்துள்ள மெக்ஸிகோவில் 46,688 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
No comments:
Post a Comment