
சென்னை : 'ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கட்சி தலைவர்கள் ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், அழகிரி மற்றும் கமல் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
ஸ்டாலின் அறிக்கை: ஸ்டெர்லைட்
ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள
தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித
குலத்தை காப்பாற்றிடும் தீர்ப்பு.அமைச்சரவையை முதல்வர் பழனிசாமி கூட்ட
வேண்டும். அதில் உயர் நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் வரவேற்று
தீர்மானமாக வெளியிட வேண்டும்.
மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு
வெளிவந்துள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை
அமைச்சரவையில் தீர்மானமாக கொண்டு வந்து அதை சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும்.
ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தமிழக அரசை
கேட்காமல்தடை ஏதும் விதிக்கப்படாமல் இருக்க உச்ச நீதிமன்றத்தில் உடனே
கேவியட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ: ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற தீர்ப்பு ம.தி.மு.க.வின் 26 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. துளியளவும் சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் உயர் நீதிமன்றத்திலும் தீர்ப்பாயத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நானே வாதங்களை எடுத்து வைத்துள்ளேன். இது நீதிக்கு கிடைத்த வெற்றி; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
பா.ம.க.
நிறுவனர் ராமதாஸ்: உயர் நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல் கல். இந்த தீர்ப்பை
எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டைர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு
செய்யும்.அங்கு மிகவும் வலிமையான வாதங்களை முன்வைத்து அழிவை ஏற்படுத்தும்
ஆலை நிரந்தரமாக மூடப்படுவதையும் ஆலையின் கட்டமைப்புகள் அகற்றப்படுவதையும்
தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி:
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை செல்லும் என
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.இந்த தீர்ப்பு
அப்பகுதி மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை
நிரந்தரமாக்குகிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்: மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால் வல்லரசுகளும் தலைவணங்கியே ஆக வேண்டும் என்பதை நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை தன் சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. 'ஸ்டெர்லைட்' போராட்ட களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும் அரசின் அடக்குமுறையில் உயிரிழந்தவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டிய நேரம் இது. போராட்ட களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றிகள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment