டெல்லி: பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகள் இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று தேர்வுகள் தொடங்குகின்றன. ஐஐடி, என்ஐடி, மத்திய அரசின் நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயில்வதற்காக ஜேஇஇ எனும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது.
அது போல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் வரும் 13-ஆம் தேதி
நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட
காரணங்களால் இந்த இரு தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என நாடு
முழுவதும் கோரிக்கைகள் வலுக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு தடை
விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு, வெள்ள
பாதிப்புகளால் இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க புதுவை, பஞ்சாப், மேற்கு வங்கம்
உள்ளிட்ட 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல்
செய்துள்ளன.
தேர்வுகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திய
மாணவர்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்கும் தனது
எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த நிலையில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று
முதல் தொடங்கியுள்ளன.
இந்த தேர்வை எழுத 16 லட்ச மாணவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மாணவர்கள்
பாதுகாப்பாக தேர்வு எழுத மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக
கூறுகிறது. ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் http://eduride.in என்ற
இணையதளம் மூலம் போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளை பெறலாம் என ஐஐடி மாணவர்களும்
முன்னாள் மாணவர்களும் ஒரு போர்ட்டலை தொடங்கியுள்ளனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment