Tuesday, September 1, 2020

பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு - அரசு அறிவிப்பு

 
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

டில்லி: உடல்நலக் குறைவால், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காலமானதை அடுத்து, அவரது உடலுக்கு இன்று (செப்.,1) இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
    
    இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84), கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஆக.,31) அவர் காலமானதாக அவரின் மகன் அபிஜித் முகர்ஜி டுவிட்டரில் தெரிவித்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் செப்டம்பர் 6ம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் காலை 9.15 முதல் 10.15 வரை முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் ராஜாஜி மார்க்கில் அவரது உடல், பொதுமக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேரம் வைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக அவரது உடல், ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்படும் என்றும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    பிரணாப் முகர்ஜியின் மரணம் அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் உயரிய பதவிகளை அலங்கரித்து தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மாநில அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில், 'மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதியும், வங்காளத்தின் புகழ்பெற்ற மகனுமான பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது,' எனப் பதிவிட்டுள்ளது.
 

 
 
 
  
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment