ஜவ்வாதுமலை அருகே நடுகற்கள், கற்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ் பேராசிரியர் ரே.கோவிந்தராஜ், வரலாற்று ஆர்வலர் வேந்தன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர், சோழர் கால நடுகற்கள் இரண்டும், தொன்மையான கல்லாயுதங்களையும் கண்டெடுத்துள்ளனர்
இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:-
எங்கள் ஆய்வுக்குழு 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள வரலாற்றுத் தடயங்களை ஆராய்ந்து வெளியுலகுக்கு வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், நடுகற்கள், கற்திட்டைகள், கற்கோடரிகள் ஆகியவை எங்கள் ஆய்வுக்குழுவால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
எங்கள் ஆய்வுக்குழு ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாட்டுக்குட்பட்ட கோம்பை என்ற மலைக்கிராமத்தில் ஆய்வை மேற்கொண்டது. அப்பொது கோம்பை நிலப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரண்டு நடுகற்களும், மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில்களில் 50-க்கும் மேற்பட்ட பெரிதும் சிறிதுமான கற்கோடரிகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதல் நடுகல், கோம்பை சிற்றூரில் உள்ள ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான நிலப்பகுதியில் உள்ளது. இது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஆகும். இது, 5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளதால், படிப்பதில் சிக்கல் உள்ளது. வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் உள்ளது. இடையில் குறுவாள் ஒன்றும் உள்ளது.
இரண்டாவது நடுகல், தலைக் கொண்டை மட்டுமே தெரிந்த நிலையில் முழுமையும் மண்மூடி கிடந்தது. சின்னதம்பி மற்றும் கேசவன் ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தில் இந்த நடுகல் உள்ளது. ஊர்மக்களின் உதவியோடு நடுகல் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. இந்த நடுகல் 5.3 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த நடுகல்லில் உள்ள எழுத்துப் பொறிப்புகள் மழை, வெயிலால் சிதைந்துள்ளது. இந்த நடுகல்லின் அமைப்பை வைத்துப் பார்க்கும் போது, பல்லவர் காலம் முடிந்து பிற்காலச் சோழர் காலம் தொடங்கிய காலமாகத் தெரிகிறது. இது, கி.பி.9-ம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கருத முடிகிறது. இவ்வீரன் நேர்த்தியான மேல் கொண்டை இட்டுள்ளான். காதுகளில் நீண்ட குண்டலங்கள் உள்ளன. இடை ஆடை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கழுத்தில் ஆபரணங்கள் அணிந்துள்ளதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது கையில் வில்லும் இடது கையில் அம்பை ஏவும் விதத்தில் நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. இவ்வீரனின் தோற்றத்தைக் காணும்போது, இனக்குழு தலைவன்போல் காட்சி தருகிறான். பகைவர்களோடு நடந்த போரில் வீர மரணம் அடைந்த இவ்வீரனை வேடியப்பன் என்ற பெயரில் இவ்வூர் மக்கள் வணங்குகின்றனர்.
இவ்வூரில் மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவிலில் பழமையான கற்கோடரிகளை இவ்வூர் மக்கள் சிறிதும் பெரிதுமாக சேகரித்து பிள்ளையாரப்பன் என்னும் பெயரில் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். கற்கோடரிகள் என்பவை புதிய கற்காலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடவும், அவற்றின் கடினமான தோல்களை கிழிப்பதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் மனிதன் கண்டறிந்த தொடக்க கால அறிவியல் கண்டுப்பிடிப்பு இதுவாகும்.
பின்னர் ‘பிளேடு’ போன்ற கூர்மையான சிறு சிறு நுண்கருவிகளையும் கண்டறிந்தான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இக்கற்கோடரிகளின் காலம் கி.மு. 1,000 அதாவது இன்றிலிருந்து 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இப்பகுதியில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வூரில் உயர்ந்த சிகரத்தில் உள்ள முருகன் கோவிலுக்குப் பின்னால் கற்திட்டைகள் பல உள்ளன. இவற்றை எங்கள் ஆய்வுக்குழு ஏற்கனவே செய்தியாக வெளியிட்டுள்ளது. எனவே பழமையான வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாக இம்மலை மக்கள் உள்ளனர். இவ்வாறு பேராசிரியர் க.மோகன்காந்தி கூறினார்.
இந்த ஆய்வின்போது கேசவன் உள்ளிட்ட ஊர் பெரியவர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment