Tuesday, July 21, 2020

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா காலமானார்!.

திருப்பத்தூர்-21

ஆம்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா (52) உடல்நலக்குறைவால் செவ்வாய்கிழமை அதிகாலை காலமானார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர், தொகுதி மறு சீரமைப்பு மூலம்  ஆம்பூர் தொகுதி மீண்டும் உருவான பிறகு 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

அஸ்லம் பாஷாவின் மறைவிற்கு இஸ்லாமிய அமைப்புகள், வக்பு வாரிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அ.அஸ்லம் பாஷா

`இளைஞரின் மரணம் வருத்தமளிக்கிறது!’ - திருப்பத்தூர் எஸ்.பி.

திருப்பத்தூர்-ஜூலை-21.

எஸ்.பி. விஜயகுமார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த முகிலன் (27). கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-ம் தேதி), முழு ஊரடங்கை மீறி தேவையில்லாத காரணங்களுக்காக பைக்கில் வெளியில் சுற்றியதாகக் கூறப்படுகிறது. வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் நகர போலீசார் முகிலனின் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகிலன், அருகில் உள்ள தன் அக்கா வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை  கொண்டுவந்து.`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம்’ என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார்.

முகிலன்

இதில், பலத்த தீக்காயமடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. மருத்துவக் குழுவின் சிறப்பு கவனிப்பில் இருந்த முகிலன், 9 நாள்களுக்குப் பிறகு, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இறந்த நபருக்கு 6 மாத கைக் குழந்தை உட்பட சின்ன சின்னதாக மூன்று குழந்தைகள் இருக்கிறது. குடும்பச் சூழல் இப்படியிருக்க அவர் தற்கொலை முடிவை எடுப்பதற்கு மதுவும் ஓர் காரணம் என்று நினைக்கிறோம். மருத்துவத்துக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இறந்த நபரின் மனைவிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், விதவைக்கான மாதாந்தர உதவித் தொகை கிடைக்கவும் கலெக்டர் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறோம்’’ என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

கருப்பர் கூட்டம் யு டுயூப் சானலில் உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கம். யூ டியூப் நிறுவனம் நடவடிக்கை.

கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது புகார் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் பலரும் கடுமையாக குரல் கொடுத்தனர்.

இந்நிைலயில் யூ டியூப் சேனல் நிறுவனர் மற்றும் தொகுப்பாளர் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில்  கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் யூ டியூப் மூலம் நீக்கப்பட்டது.

அடுத்து மொத்தமாக இந்த சேனலை நீக்க பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூ டியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இன்று இரவுக்குள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மொத்தமாக முடக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக-வினர் ஆர்பாட்டம்



திருப்பத்தூர்-ஜூலை -21.
தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வை கண்டித்து திமுக வினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் நகரத்தில் திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் நகர கழக செயலாளர் எஸ். ராஜேந்திரன் மற்றும் திமுகவினர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.

கொரோணா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மக்களுக்கு மின்சார கட்டணம் சலுகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

கிருஷ்ணமூர்த்தி.
செய்தியாளர்
ஐ நா வாழ்த்து பெற்ற மக்கள் சந்திப்பு நாளிதழ்
9442416077

இணையதளம் மூலம் மின்சார கட்டணத்தை அறியும் வசதி


www.tangedco.gov.in இணையதள முகவரிக்கு சென்று, ‘மின்கட்டண சேவைகள்’ (பில்லிங் சர்வீஸ்) பகுதிக்கு செல்ல வேண்டும். அங்குள்ள மின்கட்டண விவரம் (பில் ஸ்டேட்டஸ்). இணையதள மின் கட்டணம் (ஆன்லைன் பில் பேமென்ட்), கணக்கு விவரம் (அக்கவுண்ட் சம்மரி), மொத்த தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பத்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறி உள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா

சென்னை-ஜூலை-21.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெருங்கிய உறவினர் தொடர்பு மூலமாக குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Monday, July 20, 2020

ஆக. 1ம் தேதி முதல் பத்திர பதிவில் அதிரடி மாற்றம்.. பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!

சென்னை: ஜூலை-20.
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை.

இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ''ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.

சார்பதிவாளர்கள் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை இனி தேவையில்லை'' என்றார்.