Friday, August 14, 2020

நாளை சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

 

சென்னை-14.

    கரோனா பொதுமுடக்கம்: கிராமசபைக் கூட்டங்கள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு.

    கரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாளை சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும், சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் மற்றும் தொற்று அச்சம் காரணமாக, இந்தாண்டு நாளை சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து​செய்யப்படுவதாகவும், கிராமசபைக் கூட்டங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

மகன் தவிக்க விட்டதால் புகார் கொடுத்து முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின்படி சொத்தை மீட்ட முதியவர்கள்

 வேலூர் -14.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வசித்துவரும் ராஜாகண்ணு(80) மற்றும் அவரது மனைவி வசந்தா (75), தங்களது முதுமை காலத்தில் மகன் கவனித்துக்கொள்வான் எனக் கருதி, தங்களின் சொத்தை அவருக்கு எழுதிவைத்தனர். ஆனால் சொத்து கை மாறியதும் மகன் கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்ததால் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் சொத்தை மீட்டனர்.

    ''முதியவர்கள் தங்களை பிள்ளைகள் பராமரிக்கவில்லை என புகார் கொடுத்தால் அவர்களுக்காக இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்கீழ் அவர்களின் சொத்தை கோரமுடியும். சொத்தை மகன் மீது எழுதிவைத்துவிட்டதால், ராஜாகண்ணு மற்றும் வசந்தா மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். எங்களது விசாரணையில் மகன் பிரபு தந்தையை தாக்கியது மற்றும் பெற்றோரை கவனிக்காதது உறுதியானது. ராஜாகண்ணு தனது இரண்டு மகள்கள் உதவியோடு புகார் கொடுத்தார்கள். தற்போது ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1,100 சதுரடி நிலம் முதியவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது,''

ராஜாகண்ணு-வசந்தா தம்பதியின் இரண்டு மகன்கள் இறந்து விட்டதால், கடைசி மகன் பிரபு மீது நம்பிக்கையோடு இருந்ததாகவும், மகன் மோசமாக நடந்துகொண்டதால் பெற்றோர்கள் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறுகிறார் துணை ஆட்சியர் ஷேக் மன்சூர்.

''வசந்தா அம்மா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். புகார் கொடுத்தால் சொத்தை மீட்கலாம் என முதியவர்களுக்கு இரண்டு மகள்களும் விளக்கி பின், புகார் கொடுத்தார்கள்.

மூன்று முறை இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசினோம். ஒரு முறை பெற்றோரை கவனித்து கொள்வதாக வாக்களித்த பிரபு, பெற்றோருக்கு உதவாமல், உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதனால், மூன்றாவது விசாரணையின் முடிவில் சொத்தை மீட்டோம்.

சமீபத்தில் உசிலம்பட்டியில் இதுபோன்ற ஒரு வழக்கில் கவனிக்காத மகனிடம் இருந்து சொத்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதியவர்கள் புகார் கொடுத்தால்,முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின் 23ம் பிரிவின் படி, அவர்கள் பராமரிப்பு செலவு கோரலாம், சொத்தையும் மீட்கமுடியும்,'' என்றார் அவர்.

"முதியவர்கள் புகார் கொடுப்பது பிள்ளைகளுக்கு நேரும் அவமானம் என பெற்றோர் நினைப்பதால்தான், பலரும் புகார் கொடுக்க தயங்குகிறார்கள்"

''இந்திய குடும்பங்களில் குழந்தைகளை வளர்த்து, அவர்களின் படிப்பு, திருமணம் என குழந்தைகளின் வாழ்க்கைக்கு துணை நிற்கவேண்டியது தங்களது கடமை என பெற்றோர் எண்ணுகின்றனர். இந்த கடமை உணர்வு மற்றும் பாசத்தின் காரணமாக பல நேரங்களில் தங்களுக்கு கொடுமை நடந்தால்கூட, மௌனமாகிவிடுகிறார்கள். வேலூர் தம்பதியினர் புகார் கொடுத்து, தங்களது சொத்தை மீட்டுள்ளது பல முதியவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செயல்,''என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் குறித்து விவரித்த அவர், ''குழந்தைகள் தங்களை பராமரிக்கவில்லை என்ற நிலையில், இந்த சட்டத்தின் கீழ் பெற்றோர் வழக்கு தொடரலாம். இதற்காக நீதிமன்றம் செல்ல தேவையில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தால், விசாராணை நடைபெறும். குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் போலவே குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கொடுக்க வேண்டும் என்பதை இந்த சட்டம் உறுதிசெய்கிறது. குழந்தைகளின் வருமானத்தை பொருத்து பராமரிப்பு செலவு நிர்ணயம் செய்யப்படும். அதேபோல, சொத்து மீட்கப்பட வேண்டும் என பெற்றோர் விரும்பினால், அதனை பெறலாம்,'' என்றார் அவர்.

நீதிமன்றம் மூலமாக பெற்றோர் நீதி கோரும்போதும், மூத்த குடிமக்களின் வழக்குக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், முதியவர்கள் வன்முறையை அனுபவிக்க தேவையில்லை என்றார் அவர்.

''தயக்கம் இல்லாமல் பெற்றோர்கள் முன்வரவேண்டும். கூட்டுக்குடும்ப அமைப்பு மிகவும் அரிதாகிவிட்டது. 1950 மற்றும் 1960களில் வளர்ந்தவர்கள், தங்களது முதியவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் தங்களுக்கும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். தற்போது நுகர்வு கலாச்சாரம் அதிகரித்த சூழலில், பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமே அதிக கவனம் கொடுக்கப்படுவதால், இதுபோன்ற முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்,'' என்றார் சுதா ராமலிங்கம். 

 நன்றி : பிபிசி தமிழ் நியூஸ்

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

'வாரத்தின் சிறந்த காவலராக' தேர்வு செய்து பாராட்டு பாத்திரம் வழங்க முடிவு - திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு தகவல்.

திருப்பத்தூர்-13.

    திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு தகவல். 

திருப்பத்தூர் மாவட்டத்தில்  பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் அவர்களின் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு வாரந்தோறும் 'வாரத்தின் சிறந்த காவலராக' தேர்வு செய்து பாராட்டு பாத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  1. முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்வதற்கு பணிபுரிந்தால்
  2. காவல் நிலைய பதிவேடுகளை சிறப்பாக பராமரிக்க உதவி புரிந்தால்
  3. பொதுமக்களிடம் நற்பெயர் பெரும் வகையில் பணி செய்தால் 
  4. சிறப்பாக மனு விசாரணை மேற்கொண்டால் 
  5. வாகன சோதனையின்போது சட்டவிரோத செயல்களை கண்டுபிடிக்க உறுதுணையாக பணி புரிந்தால் 
  6. உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிறந்த பணி செய்துள்ளார் என்று கருதினால் 

சம்பந்தப்பட்ட 1. காவல் ஆளிநர்கள் 2. நிலைய பொறுப்பு அதிகாரிகள் 3. தனிப்பிரிவு காவல் ஆளிநர்கள் 4. பொதுமக்கள் யாரேனும் 5. சம்பந்தப்பட்ட உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் 

காவலரின் சிறந்த பணியினை  9486242428 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பவேண்டும். தேவை ஏற்பட்டால் வீடியோ எடுத்தும் அனுப்பலாம்.

ஒரு வாரத்திற்குள் நடைபெற்ற விவரங்களை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். திங்கள்கிழமை கடந்த வாரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆளிநர்கள் விவரம் தெரிவிக்கப்படும்.

தேர்வு செய்யப்படுபவருக்கு ரொக்கமாக ரூபாய் 500/- மற்றும் பாராட்டு பத்திரம் மற்றும் புத்தக பரிசும் வழங்கப்படும்.

எனவேதிருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள்  உள்ள காவல்  நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆளிநர்கள் சிறந்த முறையில் பனி செய்பவர்கள் குறித்த விவரங்களை மேற்குறித்த எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Thursday, August 13, 2020

பாகிஸ்தான் தமிழர்கள்: "நாங்களும் தமிழர்களே" - பெருமிதப்படும் அறியப்படாத சிறுபான்மை சமூகம்

அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, ரஷ்யா முதல் பப்புவா நியூ கினியா வரை உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பாகிஸ்தானில் தமிழர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும்.

பாகிஸ்தானில் குடும்பத்துடன் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்றளவும் தமிழர்கள் எனும் தங்களது அடையாளத்தையும் கலாசாரத்தையும் இழக்காமல் இருக்க போராடி வருகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு எப்போது, எதற்காக தமிழர்கள் சென்றார்கள்? அங்கு எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள்? அவர்கள் அனைவருக்கும் தமிழில் பேச, எழுத, படிக்க தெரியுமா? பாகிஸ்தான் தமிழர்கள் எந்த கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்? தமிழகத்துக்கும் அவர்களுக்குமான உறவு எப்படி உள்ளது? அவர்கள் உலகத் தமிழர்களுக்கும், அரசுகளுக்கும் முன்வைக்கும் கோரிக்கை என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை அலசுகிறது இந்த கட்டுரை.

1980-1990க்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதியில் நடந்த கோயில் திருவிழா
 

இந்த கட்டுரைக்காக பிபிசி தமிழிடம் பிரத்யேகமாக பேசிய இரண்டு பாகிஸ்தான் தமிழர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது பெயர் இந்த கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. 

1947இல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தற்போதைய இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண தலைநகர் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் குடியேறியதாக ஆய்விதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

குறிப்பாக, 1947ஆம் ஆண்டு, அப்போதைய மதராஸ் மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மட்டும் சுமார் 18,000 பேர் பாகிஸ்தானுக்கு சென்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் குடியேறியதாக கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய 60 வயதுக்கும் மேலான கராச்சி வாழ் தமிழர் ஒருவர்.

"நான் பிறந்தது, வளர்ந்தது என எல்லாமுமே பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான். நான் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள என பூர்வீகத்துக்கு சென்றதே இல்லை. என்னதான் பாகிஸ்தானில் வாழ்ந்தாலும் நாங்களும் தமிழர்கள்தான்" என்று ஆங்கிலம் கலக்காத தமிழில் சரளமாக பேசுகிறார் அவர்.

"தமிழ்நாட்டில் இருந்து கூட்டங்கூட்டமாக அப்போதைய இந்தியாவின் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பணிவாய்ப்புகளை தேடி சென்ற எனது பெற்றோர் உள்ளிட்டோர் கடைசியாக பாகிஸ்தானின் கராச்சி நகரை வந்தடைந்தனர்" என்று அவர் கூறுகிறார்.

 

 

கராச்சியில் எத்தனை தமிழர்கள், எங்கெங்கு வசிக்கின்றனர் என அவரிடம் கேட்டபோது, "கராச்சியில் இப்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். அதிகபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் "மதராஸி பரா" (மதராஸ் பேட்டை) என்ற பகுதியிலும், அடுத்ததாக டிரி ரோட் மற்றும் கோராங்கி ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். சிலர் கராச்சியை ஒட்டியுள்ள நகரங்களுக்கு வாய்ப்புகளை தேடி புலம்பெயர்ந்துவிட்டனர்" என்று அவர் கூறுகிறார்.

தமிழர்கள் கராச்சி நகரத்தை சென்றடைந்த காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலானோர் அங்குள்ள ஜின்னா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அந்த மருத்துவமனை வளாகத்துக்கு அருகில்தான் தமிழர்களின் குடியிருப்பு பகுதியும் உள்ளதாக பிபிசி தமிழிடம் பேசியவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கல்வியில் சிறந்து விளங்கிய தமிழர்கள் பலர் அங்குள்ள தொழிற்சாலைகளில் பொறியியலாளர்களாகவும், அரசுப்பணியிலும் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமிழர்களை இணைக்கும் கோயில்

கராச்சி நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மதராஸி பரா பகுதியில்தான், அந்த நகரின் பெரிய இந்து மத வழிபாட்டுத்தலமான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளதாக கூறுகிறார், சுமார் 45 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் மற்றொரு தமிழர்.

"கராச்சியில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் இன்னமும் இந்து மதத்தையே பின்பற்றுகிறார்கள். அந்த வகையில், இங்குள்ள மாரியம்மன் கோயில்தான் கராச்சிவாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாக விளங்குகிறது. அதாவது, பொங்கல், ஆடி மாதம், தைப்பூசம் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளை போன்று முருகருக்கு காவடி எடுத்து அலகு குத்தும் பழக்கமும் இங்கு இன்னமும் கடைபிடிக்கப்படுகிறது. அதேபோன்று, இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வப்போது தன்னார்வலர்களால் இளம் தலைமுறையினருக்கு தமிழ் மொழியும் இங்கு கற்பிக்கப்பட்டு வருகிறது" என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.

பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள் காலங்காலமாக தங்களுக்குள் தமிழ் மொழியிலும், மற்ற இடங்களில் உருது மொழியிலும் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களும், அவர்களது அடுத்த சில தலைமுறையினரும் தமிழிலில் சரளமாக உரையாடுவதோடு, எழுத, படிக்கவும் தெரிந்த நிலையில், சமீப ஆண்டுகளாக அந்த நிலைமை மோசமாகி வருவதாக வருந்துகிறார் அந்த தமிழ் முதியவர்.

"கராச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், அன்று முதல் இன்றுவரை இங்குள்ள பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படவில்லை."

"எனவே, தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த புதிதில் தமிழை நன்கறிந்திருந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பேச, எழுத, படிக்க சொல்லி கொடுத்து வந்தனர். காலப்போக்கில் அடுத்தடுத்த தலைமுறைகளை சேர்ந்த பெற்றோருக்கே தமிழ் மொழி சரளமாக பேச முடியாத நிலை உருவானதால் அவர்களது குழந்தைகளுக்கு தாய்மொழியை அறிந்துகொள்ளும் வாய்ப்பே குன்றிவிட்டது. இருப்பினும், இந்த சூழ்நிலையை கண்டு வேதனையடைந்த தன்னார்வலர்கள் சிலர் பல ஆண்டுகளாக இங்குள்ள மாரியம்மன் கோயிலில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற முறைசாரா வகுப்புகளில் அனைவரும் பங்கேற்பார்கள் என்று கூற முடியாது" என்று அவர் கூறுகிறார்.

"தமிழர்கள் பாகிஸ்தானுக்கு வந்தபோது உடலுழைப்பு சார்ந்த வேலைகளை பார்த்தார்கள். ஆனால், இப்போது நல்ல கல்வியறிவை பெறுவதற்கான சமூக அழுத்தம் அதிகரித்துள்ளது. அப்படி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் தமிழ் குழந்தைகளுக்கு தங்களது தாய்மொழியை படிப்பதற்காக வாய்ப்பே இல்லாதது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கராச்சியில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறாக இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியே."

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கராச்சியில் தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கு பன்னாட்டு அரசுகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியும், வழிகாட்டுதலும் தேவைப்படுவதாக அவர்கள் கோருகின்றனர்.

"தமிழகத்துக்கு ஒருமுறை கூட வந்ததே இல்லாத பாகிஸ்தான் தமிழர்கள் பலரும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமுடனே இருக்கிறார்கள். ஆனால், தமிழ் மொழியை கற்றுக்கொள்ள தேவையான பள்ளி போன்ற கட்டமைப்போ, புத்தகங்களோ இல்லாத நிலை அவர்களுக்கு சுணக்கத்தை ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசோ அல்லது தன்னார்வலர்களோ எங்களுக்கு தமிழ் மொழியை வளர்க்க உதவினால்தான் பாகிஸ்தானில் தமிழை நிலைக்க செய்ய முடியும். இதேபோன்று, பெரும்பாலான பாகிஸ்தான் தமிழர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால், அதற்கு அவசியமான பஞ்சாங்கம் உள்ளிட்ட விடயங்களும் இங்கு கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது" என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தமிழகம் திரும்ப விரும்புகின்றனரா பாகிஸ்தான் தமிழர்கள்?

பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு நுழைவு அனுமதி (விசா) பெறுவதில் கெடுபிடிகள் நிறைய உள்ளதாகவும், அவை சீராக்கப்பட்டால் அதிக அளவிலான பாகிஸ்தானிய தமிழர்கள் தங்களது பூர்வீகத்தை பார்வையிட வருவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் தமிழர்கள் நிரந்தரமாக தங்களது பூர்வீகத்துக்கு திரும்ப விரும்புகிறார்களா என்ற கேள்விக்கு பிபிசி தமிழிடம் பேசிய இருவரும் ஒரே பதிலை அளித்தனர். 

 "தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்த தலைமுறையினரில் பெரும்பாலானோர் தற்போது உயிருடன் இல்லை. இருப்பினும், பாகிஸ்தானிலேயே பிறந்து, வளர்ந்த பலரும் தமிழகத்துக்கு வந்து செல்ல விரும்புகிறார்கள். அவ்வப்போது சிலர் சென்று வருவதுண்டு. ஆனால், என்னை பொறுத்தவரை, பாகிஸ்தான் தமிழர்கள் யாருக்கும் மீண்டும் நிரந்தரமாக தமிழகத்துக்கு திரும்பும் எண்ணம் இல்லை. ஏனெனில், பல தலைமுறைகளாக பாகிஸ்தான்வாழ் தமிழர்களுக்குள்ளேயே திருமண உறவு நீடித்ததால் இங்குள்ள ஏராளமானோருக்கு தமிழகத்தில் நேரடி உறவுமுறைகளே இல்லை என்றே சொல்லலாம். மேலும், சமீப ஆண்டுகளாக கராச்சியில் வாழும் தமிழர்கள் வேற்று மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களை திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வருவதால், அவர்களது அடுத்த சந்ததியினருக்கும் தமிழ் மொழி கடத்தப்படுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது" என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 நன்றி : பிபிசி தமிழ் நியூஸ் 

 

 FOLLOW US OUR SOCIAL MEDIAS


          

ஆடி கிருத்திகை பெருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் முழுவதும் ஆடி கிருத்திகை பெருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
 தமிழகம் முழுவதும் ஆடி கிருத்திகை பெருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. கூட்டம் கூடுவதற்கு தடை, விழாக்கள் கொண்டாட தடை  என இருக்கும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற  திருத்தலம் ஏலகிரி அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜலகாம்பாறை ஸ்ரீ வெற்றி வேல் முருகன் திருத்தலத்தில், ஶ்ரீ வெற்றி வேல்முருகனுக்கு ஆடி கிருத்திகை பெருவிழா மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. மக்கள் குறைந்த அளவே ஆலயங்களுக்கு சென்று வழிபட நேர்ந்தது. மற்றவர்கள் தங்கள் வீடுகளிலேயே விரதம் இருந்து வழிபாடு செய்தனர். 

 
 
 
 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

ஆதியூர் கிராமத்தில் தொற்று ஆரம்பம். அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை.

 திருப்பத்தூர் -12.

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் ஒரு பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அப்பகுதி முழுதும் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்று அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 





FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைக்க தடை - தமிழக அரசு அறிவிப்பு.

 
 
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் அன்று கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது விழாவை தவிர்க்கவும் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைாக தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்துவிழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதோ , அச்சிலைகளை நீர்நிலைளில் கரைப்பதோ , தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அனுமதிக்கப்படுகிறது. 

மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திட வேண்டும் . அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

சிறி கோவில்களில் பொது மக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய, திருக்கோவில்களில் வழிபாடு செய்யும் போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொது மக்களும் திருக்கோவில் நிர்வாகமும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டு தலங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


FOLLOW US OUR SOCIAL MEDIAS