Friday, August 21, 2020

குழந்தைகள் உரிமை அமைப்பு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

 

95% மாணவர்களிடம் ஆன்லைன் கல்வி மூலம் கல்விகற்க ஏற்ற சூழ்நிலை இல்லை என்பது குழந்தைகள் உரிமை அமைப்பு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மாணவர்களிடம் இணையவழி கல்வி கற்க ஏற்ற சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பதை கண்டறிய தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 5987 மாணவர்களிடம் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் குழந்தைகள் உரிமை அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.  11 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. அதன்படி இந்த மாணவர்களில் 94% பேரிடம் ஆன்லைன் வகுப்புக்கு தேவையான இணைய வசதி இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 1,740 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெறும் 3% மாணவர்களிடம் மட்டுமே ஸ்மார்ட் போன் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் 95% மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கும் கீழ் இருக்கிறது என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த குடும்பங்களால் ஆன்லைன் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை வாங்கவே முடியாது என்று குழந்தைகள் உரிமை அமைப்பு இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 


 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Thursday, August 20, 2020

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், நடுகற்கள், கற்திட்டைகள், கற்கோடரிகள் கண்டெடுப்பு

 ஜவ்வாதுமலை அருகே நடுகற்கள், கற்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ் பேராசிரியர் ரே.கோவிந்தராஜ், வரலாற்று ஆர்வலர் வேந்தன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர், சோழர் கால நடுகற்கள் இரண்டும், தொன்மையான கல்லாயுதங்களையும் கண்டெடுத்துள்ளனர்

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:-

எங்கள் ஆய்வுக்குழு 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள வரலாற்றுத் தடயங்களை ஆராய்ந்து வெளியுலகுக்கு வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், நடுகற்கள், கற்திட்டைகள், கற்கோடரிகள் ஆகியவை எங்கள் ஆய்வுக்குழுவால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

எங்கள் ஆய்வுக்குழு ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாட்டுக்குட்பட்ட கோம்பை என்ற மலைக்கிராமத்தில் ஆய்வை மேற்கொண்டது. அப்பொது கோம்பை நிலப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரண்டு நடுகற்களும், மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில்களில் 50-க்கும் மேற்பட்ட பெரிதும் சிறிதுமான கற்கோடரிகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதல் நடுகல், கோம்பை சிற்றூரில் உள்ள ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான நிலப்பகுதியில் உள்ளது. இது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஆகும். இது, 5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளதால், படிப்பதில் சிக்கல் உள்ளது. வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் உள்ளது. இடையில் குறுவாள் ஒன்றும் உள்ளது.

இரண்டாவது நடுகல், தலைக் கொண்டை மட்டுமே தெரிந்த நிலையில் முழுமையும் மண்மூடி கிடந்தது. சின்னதம்பி மற்றும் கேசவன் ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தில் இந்த நடுகல் உள்ளது. ஊர்மக்களின் உதவியோடு நடுகல் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. இந்த நடுகல் 5.3 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல்லில் உள்ள எழுத்துப் பொறிப்புகள் மழை, வெயிலால் சிதைந்துள்ளது. இந்த நடுகல்லின் அமைப்பை வைத்துப் பார்க்கும் போது, பல்லவர் காலம் முடிந்து பிற்காலச் சோழர் காலம் தொடங்கிய காலமாகத் தெரிகிறது. இது, கி.பி.9-ம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கருத முடிகிறது. இவ்வீரன் நேர்த்தியான மேல் கொண்டை இட்டுள்ளான். காதுகளில் நீண்ட குண்டலங்கள் உள்ளன. இடை ஆடை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் ஆபரணங்கள் அணிந்துள்ளதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது கையில் வில்லும் இடது கையில் அம்பை ஏவும் விதத்தில் நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. இவ்வீரனின் தோற்றத்தைக் காணும்போது, இனக்குழு தலைவன்போல் காட்சி தருகிறான். பகைவர்களோடு நடந்த போரில் வீர மரணம் அடைந்த இவ்வீரனை வேடியப்பன் என்ற பெயரில் இவ்வூர் மக்கள் வணங்குகின்றனர்.

இவ்வூரில் மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவிலில் பழமையான கற்கோடரிகளை இவ்வூர் மக்கள் சிறிதும் பெரிதுமாக சேகரித்து பிள்ளையாரப்பன் என்னும் பெயரில் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். கற்கோடரிகள் என்பவை புதிய கற்காலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடவும், அவற்றின் கடினமான தோல்களை கிழிப்பதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் மனிதன் கண்டறிந்த தொடக்க கால அறிவியல் கண்டுப்பிடிப்பு இதுவாகும்.

பின்னர் ‘பிளேடு’ போன்ற கூர்மையான சிறு சிறு நுண்கருவிகளையும் கண்டறிந்தான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இக்கற்கோடரிகளின் காலம் கி.மு. 1,000 அதாவது இன்றிலிருந்து 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இப்பகுதியில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வூரில் உயர்ந்த சிகரத்தில் உள்ள முருகன் கோவிலுக்குப் பின்னால் கற்திட்டைகள் பல உள்ளன. இவற்றை எங்கள் ஆய்வுக்குழு ஏற்கனவே செய்தியாக வெளியிட்டுள்ளது. எனவே பழமையான வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாக இம்மலை மக்கள் உள்ளனர். இவ்வாறு பேராசிரியர் க.மோகன்காந்தி கூறினார்.

இந்த ஆய்வின்போது கேசவன் உள்ளிட்ட ஊர் பெரியவர்கள் உடனிருந்தனர்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்து, புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

 

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்து, புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும் இ பாஸ் நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் முக்கிய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னோடியாக விளங்கி கொண்டிருக்கிறது. அதிக கொரோனா டெஸ்ட் எடுத்து தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

விழாவில் அமைச்சர் வீரமணி, நீலோபர் கபில், மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Wednesday, August 19, 2020

ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது - தேர்வு குழு பரிந்துரை

 

புதுடெல்லி-19 மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோரி 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விளையாட்டு அமைச்சகத்துக்கு வந்து குவிந்தன. இதில் தகுதி படைத்தவர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஷேவாக், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சர்வதேச குத்துச்சண்டை வீரர் தேவராஜன் உள்பட 12 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.

தேர்வு கமிட்டியினர் டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் கூடி 2 நாட்களாக ஆலோசித்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வீரர், வீராங்கனைகள் பெற்ற வெற்றிகள் மற்றும் சாதனைகள் அடிப்படையில் விருதுக்குரிய நபர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் நேற்று அளித்தனர். இதனை மத்திய விளையாட்டு அமைச்சகம் இறுதி செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும். பெரும்பாலும் தேர்வு கமிட்டி அளிக்கும் பட்டியலில் மாற்றம் இருக்காது.

இதன்படி விளையாட்டு துறையின் மிக உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்பட 5 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரரான ரோகித் சர்மா, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் 5 சதங்கள் நொறுக்கி புதிய வரலாறு படைத்தார். ஏற்கனவே தெண்டுல்கர், டோனி, விராட்கோலி ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ள நிலையில், அந்த வரிசையில் 4-வது கிரிக்கெட் வீரராக ரோகித் சர்மா இணைகிறார்.

ரியோ பாரா ஒலிம்பிக் (2016) போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தவரும், கடந்த ஆண்டு நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான 25 வயது மாரியப்பன் பெயரும் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதே போல் ஆசிய விளையாட்டு சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவருமான அரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் வென்று அனைவரையும் கவர்ந்த டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா (டெல்லி) ஆகியோரும் கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பெயர் நீண்ட விவாதத்திற்கு பிறகு கடைசி நேரத்தில் கேல்ரத்னா விருது பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெறும் முதல் ஆக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆவார். கேல்ரத்னா விருதுக்கு 5 பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் அதிகபட்சமாக 4 பேருக்கு (பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜிதுராய்) கேல்ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, வில்வித்தை வீரர் அதானு தாஸ், கபடி வீரர் தீபக் ஹூடா, டென்னிஸ் வீரர் திவிஜ் சரண், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர், இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா, ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் உள்பட 29 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ‘கேல் ரத்னா’ பெற்றுள்ள மல்யுத்த மங்கை சாக்‌ஷி மாலிக், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயரும் அர்ஜூனா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கான விருது விஷயத்தில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரோணாச்சார்யா விருதுக்கு ஜஸ்பால் ராணா (துப்பாக்கி சுடுதல்), ஜூட் பெலிக்ஸ் (ஆக்கி) உள்பட 5 பேரும், தயான் சந்த் விருதுக்கு ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), அஜீத் சிங் (ஆக்கி), மன்பிரீத் சிங் (கபடி) உள்பட 15 பேரும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், இதர விருதுகளுக்கு ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா வழக்கமாக ஆகஸ்டு 29-ந் தேதி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். ஜனாதிபதி விருதுகளை வழங்குவார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான விருது விழா குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இருப்பினும் விருது விழா ஆன்-லைனில் நடைபெறும் என்றும், விருதுகள் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

மாத சராசரி பேலன்ஸ் பராமரிப்புக்கான அபராத தொகையும், எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கான கட்டணத்தையும் எஸ்பிஐ வங்கி நீக்கியுள்ளது.

 

மாத சராசரி பேலன்ஸ் பராமரிப்புக்கான அபராத தொகையும், எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கான கட்டணத்தையும் எஸ்பிஐ வங்கி நீக்கியுள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக்கு நாடு முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தலைவலியை போக்கக்கூடிய முக்கிய அறிவிப்பை எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இனி மாதாந்தர சராசரி பேலன்ஸ் தொகை இல்லாவிட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமும் இனி வசூலிக்கப்படாது. இந்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.

மாதம் சராசரி பேலன்ஸ் தொகை ரூ.25,000 வைத்திருப்போருக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் எஸ்.எம்.எஸ் அலர்ட்டுக்காக ரூ.12 வசூலிக்கப்படுகிறது. இதில் ஜிஎஸ்டியும் அடங்கும். ஏற்கெனவே அனைத்தும் சேலரி கணக்குகளுக்கும், ரெகுலர், கோல்டு, டைமண்ட், பிளாட்டிணம் கரண்ட் கணக்குகளுக்கும் இக்கட்டணம் விலக்கப்பட்டுள்ளது.

எனினும், சேமிப்புக் கணக்குகளுக்கு மாதாந்தர சராசரி பேலன்ஸ் தொகை வைத்திருக்காவிட்டால் அதற்கு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. இது எஸ்பிஐ மட்டுமல்லாமல் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இந்நிலையில் அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் சராசரி பேலன்ஸ் தொகைக்கு விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படுவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கு வசூலிக்கப்பட்டு வரும் கூடுதல் கட்டணம் இனி வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாடிக்கையாளர்களும் எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளை இலவசமாக பெற்று பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கு பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையிலோ, இணையதளத்திலோ பதிவு செய்யலாம். இன்றைய காலகட்டத்தில் டெபிட் கார்டு மோசடிகளை தடுக்க எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகள் மிக அவசியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

நிலத்தை போல் கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடியாக உயர்வு...

 
 
சென்னை: நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தது போல கட்டிடங்களுக்கும் இந்த ஆண்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கட்டுமானங்களுக்கு 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர்,மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. powered by Rubicon Project தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவின்போது .வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற சொத்துக்களை வாங்கும் போது, நிலத்தின் மதிப்புடன், கட்டடங்களின் மதிப்பையும் பத்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டும். இந்த கட்டடங்களை, எப்படி மதிப்பிட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை, பொதுப்பணி துறை ஆண்டுதோறும் வரையறை செய்து வருகிறது. திருத்தி அமைக்கப்பட்ட இந்த புதிய வழிகாட்டி மதிப்புகளை கட்டிடங்களுக்கு பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் இது தொடர்பாக அறிவிக்கை அனுப்பி உள்ளார். . அதன்படி சிறப்பு, சாதாரண, அடுக்கு மாடி, வணிகம், மருத்துவமனை கட்டிடம் என வகைப்படுத்தப்பட்டு, கட்டிடங்களுக்கு இந்த ஆண்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
காங்கிரீட் கட்டிடம் : அதன்படி சென்னையில் கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு தரை தளம் சதுர மீட்டருக்கு ரூ.8,980 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூ.8,325 என்றும் இரண்டாம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.8475 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதற்குமேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சதுர மீட்டருக்கு 127 கட்டணம் சென்னையில் பழங்காலத்து கட்டிடத்துக்கு தரைதளத்துக்கு சதுர மீட்டர் ரூ.8,215 என்றும் முதல் தளத்துக்கு ரூ.7,470 என்றும், 2ம் தளத்திற்கு ரூ.7,830 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டர் ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோன்று சாதாரண ஓட்டு வீடு மற்றும் நாட்டு ஓட்டு வீடுகள் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கும், மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
முத்திரை கட்டணமும் உயரும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 32 கிலோ மீட்டருக்கு உள்ள பகுதியில் 20 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பால் முத்திரை தீர்வை கட்டணமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த கட்டிட மதிப்பினை கொண்டு இனி வருஙகாலங்களில் முத்திரை தீர்வை வசூலிக்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
 
மாநகாட்சிகளுக்கு எவ்வளவு கோவை, மதுரை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் 15 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 சதவீதம் கொடைக்கானல், நீலகிரி ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் 15 சதவீதமும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

"ஒரே நாடு; அனைத்துப் பணிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு” - மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல்!

 

மத்திய மாநில அரசுப் பணிகளுக்கும், வங்கி தேர்வுகளுக்கும் பொது நுழைத் தேர்வினை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

மத்திய மாநில அரசுப் பணிகளுக்கும், வங்கி தேர்வுகளுக்கும் பொது நுழைத் தேர்வினை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதற்கான ஒப்புதல் பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவேடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினர்.

ரயில்வே பணியாளர் தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆகியவற்றிற்கு முதல் கட்டமாக ஒரே நுழைவுத் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்குச் செல்லலாம். இந்த தேர்வு 12 மொழிகளில் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்கள் பயன்படுத்தி அடுத்த கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு, வங்கிப் பணிகளுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தும்போது பலமுறை தேர்வுக் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மாணவர்கள் சந்திக்கின்றனர். ஒரே தேர்வு என்பதால், பணம், காலவிரயம் தவிர்க்கப்படும். எனவேதான் புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் முறைகேடுகளும் தடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த தேர்வினை மாநில அரசுகளும் அரசுப் பணியாளர்கள் தேர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதற்காக தேசிய பணியாளர் தேர்வு முகமை டெல்லியை மையமாக கொண்டு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS